ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் ஏரியின் மதகு திறந்த ஒரு மணி நேரத்தில் மூடல்

* தமிழக விவசாயிகள் கவலை * ஒத்திகை பார்த்ததாக அதிகாரிகள் தகவல்

சென்னை: ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் ஏரியின் மதகை திறந்த ஒரு மணி நேரத்தில் மூடப்பட்டது, மதகுகள் நல்ல முறையில் இயங்குகிறதா என ஒத்திகை பார்க்கவே திறந்ததாக பொதுப்பணி துறை அதிகாரிகள் தெரிவித்தனர். உடனடியாக மூடியதால் தண்ணீர் வரும் என எதிர்ப்பார்த்த விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.ஊத்துக்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள ஆந்திர மாநிலமான நாகலாபுரம், நந்தனம், பிச்சாட்டூர் பகுதிகளில்  கடந்த 4 நாட்களாக தொடர் மழையால் ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் ஏரி நிரம்பியது.  இந்த ஏரியின் கொள்ளளவு   281 மில்லியன் கன அடியாகும். தற்போது, 278 மில்லியன் கன அடி உள்ளது.  280 மில்லியன் கன அடி நீர் இருப்பு வந்தால் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்படும்.  நேற்று 280 மில்லியன் கனஅடி நீர் இருப்பு இருந்ததால் தண்ணீர் திறக்கப்பட்டது.  இதை, நேற்று ஆந்திர மாநிலம் சத்தியவேடு எம்எல்ஏ ஆதிமூலம், ஆந்திர பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மதனகோபால் ஆகியோர் தொடக்கத்தில் இரண்டு மதகுகள் வழியாக வினாடிக்கு 200 கனஅடி வீதம் திறக்கப்பட்டு பின்னர் படிப்படியாக 400 கனஅடி வரை திறந்து வைத்தனர்.

இந்த தண்ணீர்  தற்போது நாகலாபுரம், நந்தனம், காரணி வழியாக சுருட்டபள்ளி அணையை அடைந்து ஊத்துக்கோட்டை ஆரணியாற்றில் பாய்கிறது.  இந்த தண்ணீர் திறக்கப்பட்டு ஆரணியாற்றில் தண்ணீர் வருவதால் தமிழக விவசாயிகளின் 6,600 ஏக்கர் விவசாய நிலமும், ஆந்திர விவசாயிகள் 5,500 ஏக்கர் நிலமும் பயன் பெறும். தண்ணீர் திறக்கப்பட்டு ஒரு மணி நேரத்தில் மூடி விட்டார்கள். இதனால், தமிழக விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர். மழை வந்து தொடர்ந்து தண்ணீர் திறந்தால் ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி, பொன்னேரி வழியாக பழவேற்காடு கடலில் இந்த தண்ணீர் கலக்கும்.இது குறித்து ஆந்திர பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:பிச்சாட்டூர் அணையில் தற்போது 28.50 அடி தண்ணீர் உள்ளது. அதனால், மதகை சோதனை செய்வதற்காகவே தண்ணீர் திறந்தோம். ஏனெனில், 2004ம் ஆண்டு பிச்சாட்டூர் ஏரியில் தண்ணீர் திறப்பதற்குள் மதகு பழுதடைந்து விட்டது. இதனால், ஏரிகரை உடைந்து விட்டது.  அதனால், மற்றொரு மதகு புதிதாக கட்டினோம்.

கடந்த, 2015ம் ஆண்டு அந்த மதகு வழியாகதான் தண்ணீர் திறந்தோம்.  மேலும், கடந்த 3 நாட்களாக மழை இல்லை. தொடர்ந்து மழை பெய்தால் தண்ணீர் திறக்கப்படும், அப்படி இல்லாவிட்டால் இந்த ஏரியில் தண்ணீர் குறைய ஆரம்பித்தால் தண்ணீர் திறப்பு நிறுத்தப்படும்.  இந்த ஏரிக்கு புத்தூர், நாராயணவனம், வடமலைப்பேட்டை ஆகிய பகுதிகளில் வரும் மழைநீர் வந்து சேர 3 நாட்கள் ஆகும். அந்த தண்ணீர் வந்து ஏரியில் நீர்வரத்து அதிகரித்தால் மீண்டும் தண்ணீர் திறக்கப்படும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: