வேப்பம்பட்டு 2 ஊராட்சிகளில் வெளியேறும் மழைநீரால் வெள்ளத்தில் மிதக்கும் டன்லப் நகர்

* பொதுமக்கள் கடும் அவதி

* மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

திருவள்ளூர்: வேப்பம்பட்டு 2 ஊராட்சிகளில், மழைநீர் செல்ல வழியின்றி 18 நகர் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கடும் அவதியடைகின்றனர்.  இதற்கு, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என எதிர் பா்க்கின்றனர்.திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம், 25 வேப்பம்பட்டு மற்றும் 26 வேப்பம்பட்டு ஆகிய ஊராட்சிகளுக்கு இடையே டன்லப் நகர் அமைந்துள்ளது.  25  வேப்பம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட 6 நகர பகுதிகளில் இருந்து வெளியேறும் மழைநீரும், 26 வேப்பம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட 12 நகர் பகுதிகளில்  இருந்து வெளியேறும் மழைநீரும் டன்லப் நகர் வழியாக வெளியே செல்ல வேண்டும்.ஆனால் மழைக்காலங்களில் மழைநீர் வெளியேற கால்வாய் வசதியின்றி, மழைநீர் கடந்த 3 மாதங்களாக டன்லப் நகர் பகுதியிலேயே தேங்கி  கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, கொசு உற்பத்தியாகி டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சலால் பொதுமக்கள் பெரிதும்  பாதிப்படைகின்றனர்.

இதுகுறித்து 18 நகர்களில் வசிக்கும் பொதுமக்கள் கடந்த 1998ம் ஆண்டு முதல் மாவட்டத்தில் பொறுப்பு வகித்த பல கலெக்டர்களிடம்  பலமுறை மனு  கொடுத்தனர்.

இதைதொடர்ந்து, கடந்த 2011ம் ஆண்டு அப்போதைய கலெக்டர் உத்தரவின் பேரில் ஊராட்சிகளின் உதவி இயக்குனர் மழைநீர் கால்வாய் அமைக்க   டன்லப் நகரை ஆய்வு செய்தார். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.மழைநீர் கால்வாய் இல்லாததால்  மழைக்காலங்களில், தண்ணீர் வெளியேற வழியின்றி  வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. மேலும் வீடுகளைச் சுற்றி  ஏரி மற்றும் குளம் போல் தண்ணீர் தேங்கி விடுகின்றது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைகின்றனர். மழைநீர் கால்வாய் அமைக்க உரிய  நடவடிக்கை எடுக்குமாறு 18 நகர்ப்பகுதி மக்கள் மேற்கண்ட 2 ஊராட்சிமன்ற தலைவர்களிடம் கடந்த குடியரசு தினத்தில் நடந்த கிராம சபை  கூட்டத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர். அதன்பேரில் 2 ஊராட்சி தலைவர்களும் போதிய நிதி இல்லாததால், 15வது நிதிக்குழு மாநியத்தில் நிதி  ஒதுக்கீடு செய்து தருமாறு தீர்மானம் நிறைவேற்றி கலெக்டருக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும்  தற்காலிகமாக மழைநீர் வீடுகளுக்குள் புகாமல் தடுக்க தற்காலிக மழைநீர் கால்வாய் அமைத்துள்ளனர். எனவே பொதுமக்கள்   பாதிப்படையாமல் இருக்க நிரந்தரமாக மழைநீர் கால்வாய் அமைத்து 18 நகர்ப்பகுதிகளில் இருந்தும் வெளியேறும் மழைநீர், பட்டமலம் தாங்கல் வழியாக  சென்று  ஏரி கால்வாய் மூலமாக பாக்கம் ஏரியில் சென்றடைய செய்ய வேண்டும். இதற்கு, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்  என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: