சொத்து குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட 10 கோடி அபராதம் செலுத்தினார் சசிகலா: பெங்களூரு தனி நீதிமன்றத்தில் டிடி தரப்பட்டது

பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் நீதிமன்றம் சசிகலாவுக்கு விதித்த அபராத  தொகை ரூ.10 கோடியே 10 லட்சத்திற்கான வங்கி வரையோலை  பெங்களூரு தனி  நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது.தமிழக முதல்வராக ஜெயலலிதா கடந்த 1991  முதல் 1996ம் ஆண்டு வரை இருந்தபோது, ரூ.66.65 கோடி வருமானத்திற்கும் அதிகம்  சொத்து  சேர்த்துள்ளதாக தமிழக லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு போலீசார்  வழக்கு பதிவு செய்தனர். இதில் முதல் குற்றவாளியாக ஜெயலலிதா, 2வது   குற்றவாளியாக சசிகலா, 3வது குற்றவாளியாக வி.என்.சுதாகரன், 4வது  குற்றவாளியாக இளவரசி ஆகியோர் சேர்க்கப்பட்டனர். பெங்களூரு தனி  நீதிமன்றத்தில் சுமார் 10  ஆண்டுகள் தொடர்ந்து நடந்த விசாரணை முடிந்து 2014 செப்டம்பர் 27ம் தேதி  நீதிபதி ஜான் மைக்கல் டிகுன்ஹா வழங்கிய  தீர்ப்பில் ஜெயலலிதா உள்பட நான்கு  பேரையும் குற்றவாளியாக உறுதி செய்ததுடன் நான்கு பேருக்கும் தலா  நான்காண்டுகள் சிறை தண்டனையும்  முதல் குற்றவாளியான ஜெயலலிதாவுக்கு ரூ.100  கோடியும் மற்ற மூன்று பேருக்கு தலா ரூ.10 கோடியே 10 லட்சம் அபராதம்  விதித்து  உத்தரவிட்டார். தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து  குற்றவாளிகள் தரப்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு  செய்யப்பட்டது.

அதில், ஜெயலலிதா உள்பட 4 பேரையும் குற்றவாளிகள்  இல்லை என கூறி நீதிபதி குமாரசாமி விடுதலை செய்தார். இதை   எதிர்த்து கர்நாடக  மாநில அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு  செய்யப்பட்டது. அம்மனுவை விசாரணை நடத்திய நீதிமன்றம் 2017 பிப்ரவரி 14ம்  தேதி  வழங்கிய தீர்ப்பில் நான்கு பேரையும் விடுதலை செய்து உயர்நீதிமன்றம்  வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ததுடன் தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை  உறுதி  செய்து உத்தரவிட்டது.அதை தொடர்ந்து கடந்த 2017 பிப்ரவரி 15ம் தேதி  வழக்கில் 2வது குற்றவாளியான சசிகலா, 3வது குற்றவாளியான சுதாகரன், 4வது  குற்றவாளியான  இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில்  அடைக்கப்பட்டனர். கடந்த 44 மாதங்களாக சிறையில் உள்ள குற்றவாளிகளின்  தண்டனை காலம் வரும் பிப்ரவரி மாதம் முடிகிறது.  இதனிடையில் சசிகலா விடுதலை தொடர்பாக ஆர்டிஐ சட்டத்தில் சமூக ஆர்வலர்   விண்ணப்பித்திருந்த கேள்விக்கு பதிலளித்திருந்த சிறை கண்காணிப்பாளர் 2021  ஜனவரி 27ம் தேதி சசிகலா விடுதலை செய்ய வாய்ப்புள்ளதாக  தெரிவித்திருந்தார்.

இதனிடையி–்ல்  சிறையில் தண்டனை அனுபவித்து மூன்று பேரும் நீதிமன்றம் விதித்திருந்த அபராத  தொகையை செலுத்தாமல் இருந்தனர்.  இந்நிலையில் சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட  ரூ.10 கோடியே 10 லட்சம் அபராத தொகைக்கான வங்கி வரையோலை (டிடியை )பெங்களூரு  தனி  நீதிமன்றத்தில் நீதிபதி சிவப்பாவிடம் நேற்று மாலை வக்கீல்  சி.முத்துகுமார் செலுத்தினார். அவருடன் வக்கீல் ராஜா செந்தூர் பாண்டி  உடனிருந்தார்.  சசிகலா தரப்பில் செலுத்திய அபராத தொகைக்கான வரையோலையை  நீதிபதி பெற்று கொண்டார். இவ்வார இறுதி அல்லது அடுத்த வாரம் சுதாகரன்   மற்றும் இளவரசி ஆகியோருக்கான அபராத தொகை செலுத்தப்படும் என்று தெரிகிறது.

Related Stories: