மதுரை உட்பட 6 மாவட்டங்களில் கனமழை; சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்

மதுரை: மதுரை, திண்டுக்கல், விருதுநகர் உட்பட 6 மாவட்ட நேற்று கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பகல் முழுவதும் அவ்வப்போது விட்டுவிட்டு மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குமரி கடலில் நிரவும் வழிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மதுரை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாகவே தொடர்ச்சியாக மழை கொட்டி வருகிறது. நேற்று மதியம் முதலே திடீரென கரும் மேகங்கள் ஒன்று திரண்டன. மாலை 3 மணி முதல் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து மாவட்டத்தில் திருமங்கலம், உசிலம்பட்டி, மேலூர் மற்றும் வண்டியூர், அண்ணாநகர், பெரியார் பஸ் ஸ்டாண்ட், சிம்மக்கல், தல்லாகுளம், திருப்பாலை, புதூர், பழங்காநத்தம், கோரிப்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் ரோடுகளில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. பெரியார் பஸ் ஸ்டாண்ட், மாசி வீதிகளில் தண்ணீர், குளம் போல் தேங்கியது. தண்ணீர் செல்ல முடியாததால் போக்குவரத்து முடங்கியது.

இதேபோல் மதுரையில் முக்கிய ரோடுகளில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியதால் வாகனங்கள் தத்தளித்து சென்றன. மேலும் கோரிப்பாளையம், மதிச்சியம் பகுதியில் இருந்த மழைநீருடன் சாக்கடை தண்ணீரும் கலந்து வைகை ஆற்றில் பாய்ந்ததால் துர்நாற்றம் வீசியது. தொடர் மழையால் மதுரை நகரில் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. திலகர்திடல் பகுதியில் உள்ள ரயில்வே மேம்பாலம், கர்டர் பலத்தின் கீழ் பகுதியில் கடந்த மழைக்கு தேங்கிய தண்ணீரில் சைக்கிளில் சென்ற முதியவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுபோன்ற சம்பவங்கள் நடக்காத அளவிற்கு திலகர்திடல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் பாலத்திற்கு கீழ் யாரும் செல்ல முடியாத அளவிற்கு தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகளை மாற்று பாதையில் அனுப்பி வைத்தனர். இதுபோன்று ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. இதனால் பல சாலைகள் மழைநீரில் மூழ்கின.

Related Stories: