நாகர்கோவில் - திருநெல்வேலி இடையே மெமு ரயில் பராமரிப்பு பணிமனை அமைக்கப்படுமா?...தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்கள் கிடைக்கும்

நாகர்கோவில்: நாகர்கோவில் - திருநெல்வேலி இடையே மேலப்பாளையத்தல் மெமு ரயில்கள் பராமரிப்பு பணிமனை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மெமு (Main line electrical multiple units) என்று சொல்லப்படும் ரயில்களை தற்போது ரயில்வே நிர்வாகம் அதிகமாக இயக்கி வருகிறது. கன்னியாகுமரியிலிருந்து கொல்லத்துக்கு மெமு ரயில் தற்போது இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் குமரி மாவட்ட பயணிகளிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ரயில் கன்னியாகுமரிக்கு பதில் நாகர்கோவில் வழியாக திருநெல்வேலியிருந்து கொல்லத்துக்கு இயக்கப்பட்டிருந்தால் நெல்லை மாவட்ட பயணிகளுக்கும் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்பது கருத்தாக உள்ளது. ஒரு ரயில் இயக்கப்படுவதற்கு முன்பு, அதன் பராமரிப்பு வசதிகளை ரயில்வே நிர்வாகம் ஆய்வு செய்யும். அந்த வகையில், கொல்லத்தில் மெமு ரயில்களை பராமரிக்கும் பணிமனை உள்ளது. ஆகவே திருவனந்தபுரம் கோட்டத்தில் இயக்கப்படும் அனைத்து மெமு ரயில்களும் கொல்லத்தை மையமாக வைத்தே இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் கழிவறை வசதிகள் உள்ளதால் அதிக தூரம் கொண்ட இடங்களுக்கும் மெமு ரயிலை அறிவித்து இயக்க முடியும்.

மற்ற ரயில்களுக்கு இஞ்சின் மாற்றுவது போன்று மெமு ரயிலுக்கு இஞ்சின் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. மெமு ரயில்கள் சாதாரண பயணிகள் ரயில்களை காட்டிலும் வேகமாக இயக்கபடுகின்ற காரணத்தால் இதில் பயணிக்கும் பயணிகளுக்கு பயண நேரம் கணிசமாக குறைகின்றது. மதுரையிலிருந்து நெல்லை வழியாக கன்னியாகுமரி, தூத்துக்குடி ரயில் பாதைகள் மின்சார மயமாகப்பட்டு மின்சார இஞ்சின் மூலமாக எக்ஸ்பிரஸ் ரயில்கள் 2014-ம் ஆண்டு முதலே இயக்கப்பட்டு வருகிற காரணத்தால் இந்த தடங்களில் மெமு ரயில்கள் அறிவித்து இயக்க முடியும். ஆனால் இதுவரை இந்த பகுதிகளில் மெமு ரயில் இயக்க எந்த ஒரு திட்டமும் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் திருவனந்தபுரம் கோட்டமோ தங்கள் பகுதிகளில் மின்மயமாக்கல் பணிகள் முடியும் முன்பே மெமு ரயில் இயக்க அறிவிப்பை வெளியிட்டு மின்மயமாக்கல் பணிகளுக்காக காத்து இருந்தனர். மெமு ரயிலை பராமரிக்க தற்போது தெற்கு ரயில்வேயில் கொல்லம், பாலக்காடு, ஆவடி, ஆகிய இடங்களில் மட்டுமே பணிமனைகள் அமைந்துள்ளன. சேலம் கோட்டத்தில் இயக்கப்படும் மெமு ரயில்கள் அருகில் உள்ள பாலக்காட்டில் மெமு பணிமனையில் பராமரிக்கப்படுகின்றது. ஆனால் மதுரை, திருச்சி கோட்டங்களில் எந்த ஒரு பணிமனையும் இல்லை.

திருச்சி, மதுரை கோட்டங்களில் மெமு பராமரிப்பு பணிமனை ஒன்று கூட அமைக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டு வருகின்றது. நாகர்கோவில் - திருநெல்வேலிக்கு இடையே மேலப்பாளையத்தில் மெமு ரயில் பராமரிப்பு பணிமனை அமைக்க பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. மேலப்பாளையம் ரயில் நிலையத்தில் தேவையான நிலம் ரயில்வே வசம் உள்ளது. இது மட்டுமில்லாமல் இங்கு தேவையான கட்டிட வசதிகள் தற்போது அமைக்கப்பட்டுள்ளன. ஆகவே மேலப்பாளையம் ரயில் நிலையத்தில் மெமு பராமரிப்பு பணிமனை அமைக்க வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து ரயில் பயணிகள் சங்க தலைவர் ராம் கூறியதாவது : மதுரை கோட்டத்தில் திருநெல்வேலி - திருச்செந்தூர், திருநெல்வேலி - செங்கோட்டை, விருதுநகர் - செங்கோட்டை, திண்டுக்கல் - பொள்ளாச்சி, மதுரை - ராமேஸ்வரம், செங்கோட்டை - கொல்லம் போன்ற வழித்தடங்கள் மின்மயமாக்கல் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றது. இந்த பணிகள் முடிவு பெற்றுவிட்டால் இந்த தடங்களில் தற்போது இயங்கும் சாதாரண ரயில் பெட்டிகளை மாற்றி விட்டு மெமு ரயில்கள் இயக்க முடியும். ஆனால் இவ்வாறு மெமு ரயில்கள் இயக்க வேண்டுமென்றால் மெமு பராமரிப்பு பணிமனை தென் மாவட்டங்களில் தற்போது இல்லை.

கொல்லம் அல்லது பாலக்காடு வரை பராமரிப்புக்கு என காலியாக இயக்கி மெமு ரயில்கள் மதுரை, திருச்சி கோட்டங்களில் இயக்குவது என்பது ரயில்கள் இயக்கும் நடைமுறைக்கு ஒத்துவராத காரியம் ஆகும். இதனால் தான் மேலப்பாளையத்தில் மெமு ரயில் பராமரிப்பு பணிமனை அமைக்கப்பட வேண்டும். இவ்வாறு திருநெல்வேலியில் இந்த பணிமனை அமைக்கப்பட்டால் திருநெல்வேலியை மையமாக வைத்து மெமு ரயில்கள் அதிக அளவில் இயக்கப்படும். அதாவது திருநெல்வேலி - கொல்லம், திருநெல்வேலி - மதுரை போன்ற வழித்தடங்களில் மெமு ரயில்கள் இயக்கப்படும். இது மட்டுமில்லாமல் திருச்செந்தூர் - திருநெல்வேலி - , செங்கோட்டை - திருநெல்வேலி , கன்னியாகுமரி - திருவனந்தபுரம் போன்ற இடங்களுக்கு நேரடியாக மெமு ரயில்கள் இயக்க முடியும். ஏனென்றால் இவ்வாறு இயங்க எந்த ஒரு இடத்திலும் ரயில் இஞ்சின் கழற்றி மறுமுனையில் இணைக்க வேண்டிய அவசியம் இருக்காது. இது மட்டுமில்லாமல் முனைய ரயில் நிலையங்களான திருநெல்வேலி, செங்கோட்டை, நாகர்கோவில் ரயில் நிலையங்களில் இடநெருக்கடி வெகுவாக குறையும் என்றார்.

Related Stories: