மழையால் சேறும் சகதியுமாக மாறிய சாலையில் மக்கள் நாற்று நடும் போராட்டம்

அரியலூர்: அரியலூர் அருகே மழைக்கு சேறும் சகதியுமாக மாறிய சாலையில் பொதுமக்கள் நாற்றுநடும் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். அரியலூர் மாவட்டம் சுண்டக்குடி அருகே உள்ள சிலுப்பனூர் கிராமத்தில் உள்ள அம்பேத்கர் நகரில் கடந்த 40 ஆண்டுகளாக சாலைவசதி செய்துதரப்படவில்லை. இதனால் மழைகாலங்களில் சாலைகள் சேறும் சகதியாக மாறிவிடுவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர். சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை இந்த சாலையில் நடக்கும்போது சகதியில் வழுக்கி விழுகின்றனர்.

இதுகுறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கும், ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களுக்கு மனு அளித்தும் இதுவரை சாலைகள் சீர்செய்யப்படவில்லை. போதிய குடிநீர் வசதி செய்துதரப்படாமலும், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்படாததாலும் பொதுமக்கள் 4 கிலோமீட்டர் தூரத்திற்கு சென்று குடிநீர் எடுத்துவரும் அவலமும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது பெய்துவரும் மழையால் சேறும் சகதியுமாக மாறிய சாலையின் அவலநிலையை எடுத்துக்காட்டும் வகையில் சகதியான சாலையில் பொதுமக்கள் நேற்று நாற்றுநடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், சாலையை சிரமைக்க வேண்டும். குடிநீர் வசதி செய்துதர வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.

Related Stories: