தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விவகாரம் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள நாடாளுமன்றத்துக்கே அதிகாரம்: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்

புதுடெல்லி: கிரிமினல் குற்ற வழக்கில் தண்டிக்கப்படும் அரசியல்வாதிகள், தண்டனை முடிந்து 6 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டால் அவர்கள்  எம்.எல்.ஏ மற்றும் அமைச்சராக கூட பதவி வகிக்க முடியும் என்பதால் அப்படிப்பட்டவர்கள் தேர்தலில் நிற்க வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் என  வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஒருசில வழிகாட்டுதல்களை வழங்கியது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக புதிய பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘கிரிமினல்  வழக்குகளில் தண்டனை பெறுவது மட்டுமில்லாமல் அதுதொடர்பாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து ஒரு வருடம் ஆனவர்கள் மற்றும்  அதேப்போன்று 5 ஆண்டுகாலம் சிறை தண்டனை பெற்ற நபர்களும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும் வகையில் மக்கள் பிரதிநிதித்துவ  சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள நாடாளுமன்றத்திற்கு உத்தரவிட வேண்டும்‘ என குறிப்பிடப்பட்டது.

இந்த மனு உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி நவீன் சின்கா தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,  ‘‘இந்த விவகாரத்தில் நாடாளுமன்றம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ள  நாடாளுமன்றத்திற்கு நீதிமன்றங்கள் எந்தவித உத்தரவும் பிறப்பிக்க முடியாது’’ என தெரிவித்தனர்.அப்போது குறுக்கிட்ட மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்,” இந்த விவகாரத்தில் கண்டிப்பாக நாடாளுமன்றம் எந்த உரிய நடவடிகைகளையும் எடுக்காது.  ஏனெனில் அங்கு இருக்கும் உறுப்பினர்களில் 33 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் கடுமையான குற்றப் பின்னணி உடையவர்கள். அதனால் நீதிமன்றம்  தான் ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’’ என தெரிவித்தார். ஆனால், மனுதாரர் கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து  உத்தரவிட்டனர்.

Related Stories: