மத்திய அரசு ஆலோசனை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ரத்து?

புதுடெல்லி: கொரோனா நோய் தொற்று அச்சுறுத்தலை அடுத்து நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை ரத்து செய்து, ஜனவரியில் பட்ஜெட்  கூட்டத் தொடரை நடத்துவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாத பிற்பகுதியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி டிசம்பர் வரை நடத்தப்படும். ஆனால் தற்போது  கொரோனா பாதிப்பால் இதுவரை கூட்டத்தொடருக்கான ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை. கொரோனா நோய் தொற்று அச்சுறுத்தல் காரணமாக குளிர்கால கூட்டத்தொடரை ரத்து செய்துவிட்டு ஜனவரியில் நடத்துவது குறித்து மத்திய அரசு  ஆலோசித்து வருகின்றது. 2021ம் ஆண்டு ஜனவரியில் பட்ஜெட் கூட்டத்தொடருடன் குளிர்கால கூட்டத்தொடரை நடத்துவது குறித்தும்  ஆலோசிக்கப்படுகின்றது.  

கடந்த முறை மழைக்கால கூட்டத்தொடரின்போது கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட்டது. அப்போது கொரோனா பாதிப்பு  எண்ணிக்கை டெல்லியில் 2000 முதல் 3000 வரை மட்டுமே இருந்தது. அப்போது சுமார் 30க்கும் மேற்பட்ட எம்பிக்களுக்கு கொரோனா நோய் தொற்று  ஏற்பட்டது. இதன் காரணமாக கூட்டத்தொடர் முன்கூட்டியே முடிக்கப்பட்டது. ஆனால் தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 7000த்துக்கும்  அதிகமாக உள்ளது.

இந்த நிலையில் கூட்டத்தொடரை நடத்தினால் உறுப்பினர்களுக்கு கொரோனா நோய் தொற்று ஏற்படலாம் என்ற அச்சம்  நிலவுகின்றது. மேலும், மழைக்கால கூட்டத் தொடரின் போது 30 எம்பிக்கள் கொரோனா பாதிப்புக்குள்ளாகினர். இதன் காரணமாக குளிர்கால  கூட்டத்தொடரை ரத்து குறித்து தீவிர ஆலோசனை நடந்து வருகின்றது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கள் எதுவும் இதுவரை  வெளிவரவில்லை.

Related Stories: