மறுவாக்கு எண்ணிக்கையில் சாதனை ஜார்ஜியாவிலும் பிடென் வெற்றி: வடக்கு கரோலினாவை தக்கவைத்தார் டிரம்ப்

வாஷிங்டன்: ஜார்ஜியாவில் நடந்த மறுவாக்கு எண்ணிக்கையிலும் பிடெனின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. 1992ம் வருடத்துக்குப் பிறகு இம்மாகாணத்தில் ஜனநாயகக் கட்சி வரலாற்று வெற்றி பெற்றுள்ளது.சமீபத்தில் முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் தபால் வாக்குகளில் மோசடி நடந்திருப்பதாக அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார். மேலும், இந்த வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும் என்றும் கோரி வருகிறார். இதற்காக, பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கும் தொடர்ந்துள்ளார். குறிப்பாக, ஜார்ஜியா மற்றும் வடக்கு கரோலினாவில் மீண்டும் வாக்குகளை எண்ண வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். இதனால், ஜார்ஜியாவில் கைகளால் மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், 14,152 வாக்குகள் வித்தியாசத்தில் பிடென் வெற்றி பெற்றார். பிடெனுக்கு 49.5 சதவிகித வாக்குகளும், டிரம்ப்புக்கு 49.2 வாக்குகளும் கிடைத்துள்ளன.

1992ம் ஆண்டில் பில் கிளிண்டன் வெற்றி பெற்ற பிறகு, ஜனநாயகக் கட்சி இந்த முறை ஜார்ஜியாவில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.வடக்கு கரோலினாவில் 73,600 வாக்குகள் வித்தியாசத்தில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். பிடென் 48.6 சதவிகிதமும், டிரம்ப் 50 சதவிகித வாக்குகளையும் பெற்றுள்ளனர். இரண்டு மாகாணங்களின் மறுவாக்கு எண்ணிக்கையின் மூலம் பிடெனின் எலக்ட்ரோல் வாக்குகள் 306 ஆகவும், டிரம்பின் எலக்ட்ரோல் வாக்குகள் 232 ஆகவும் உயர்ந்துள்ளது.  தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக டிரம்ப் கூறும் குற்றச்சாட்டை  தேர்தல் அதிகாரிகள் மறுத்து வருகின்ளறனர். அவர்கள் கூறுகையில், ‘‘ஜார்ஜியாவில் 5 லட்சம் வாக்குகள் கையால் எண்ணப்பட்டுள்ளன. தேர்தல் பணியாளர்கள் மாகாணம் முழுவதையும் இதுதொடர்பாக ஆய்வு செய்துள்ளனர். ஜார்ஜியாவில் இதுபோல் வாக்கு எண்ணிக்கை தணிக்கை செய்யப்படுவது இதுவே முதன்முறை. அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் பாதுகாப்பாக நடந்து முடிந்துள்ளது இந்த தேர்தல்தான்,’’ என்றனர்.

பிடெனின் வெற்றியை டிரம்ப் ஏற்க மறுத்து வரும் நிலையில், நேற்று மாலை அவருடைய பெயரில் வெளியான டிவிட்டர் பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் அவர் பிடெனின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல், ‘தேர்தலில் முறைகேடு நடந்ததால் அவர் வெற்றி பெற்றுள்ளார்,’ என்று குறிப்பிட்டு இருந்தார். இதனால், பிடெனின் வெற்றியை முதல் முறையாக டிரம்ப் ஏற்றுக் கொண்டதாக பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், அடுத்த சில நிமிடங்களில் அவர் வெளியிட்ட மற்றொரு டிவிட்டர் பதிவில், ‘நான் எதையும் ஏற்றுக் கொள்ளவில்லை. நான் ஏற்றுக் கொண்டதாக வெளியான செய்தி, போலி செய்திகளை பரப்பும் ஊடகங்களின் செயல். இன்னும் நிறைய பார்க்க வேண்டியுள்ளது. கண்டிப்பாக, நாங்கள்தான் வெற்றி பெறுவோம்,’ என கூறியுள்ளார்.

டிரம்ப் பேரணியில் மோதல் வாலிபருக்கு கத்திக்குத்து

அதிபர் தேர்தலில் மோசடி நடந்திருப்பதாக டிரம்ப் கூறிவரும் குற்றச்சாட்டுக்கு ஆதரவாக, அவருடைய கட்சியினரும், ஆதரவாளர்களும் நேற்று முன்தினம் வாஷிங்டனில் ஊர்வலம் நடத்தினர். இதில், பல ஆயிரம் பேர் கோஷம் எழுப்பியபடி சென்றனர். வெள்ளை மாளிகையின் அருகே இந்த பேரணி வந்தபோது, திடீரென்று டிரம்ப் ஆதரவாளர்கள் மீது அழுகிய முட்டை, பேனர்கள், தொப்பிகள் வீசப்பட்டது. இதனால், டிரம்ப்புக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் கருப்பின ஆதரவாளர்கள் இதை செய்தனர். இதனால், இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், கருப்பின மக்களின் போராட்டத்தை முன்னின்று நடத்தி வரும் 20 வயது கருப்பின வாலிபர்கள் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார். அவர் படுகாயமடைந்தார். மேலும், மோதலில் 2 போலீசார் காயமடைந்தனர். இவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.முன்னதாக, போராட்டம் நடந்த இடத்தின் வழியாக காரில் சென்ற டிரம்ப், தனது ஆதரவாளர்களை நோக்கி கைகளை அசைத்து உற்சாகமூட்டினார். மேலும், ஆயிரக்கணக்கில் கூடியுள்ள தனது ஆதரவாளர்களை ஒளிபரப்பில் காட்டாமல், செய்தி சேனல்கள் இரட்டிப்பு செய்வதாகவும் டிவிட்டர் பதிவில் அவர் குற்றம்சாட்டினார்.

‘நாளை என்ன நடக்கும்?யாருக்கும் தெரியாது...’

மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகள் பற்றி கருத்து தெரிவித்த டிரம்ப், ‘‘‘இனிமேல், கொரோனா ஊரடங்கை எனது நிர்வாகம் அறிவிக்காது. நாளை என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. அடுத்த நிர்வாகம் அமைவது பற்றியும் யாருக்கும் தெரியாது. ஜனவரி 20ம் தேதிதான் அமெரிக்க அதிபர் யார் என்பது உறுதியாகும்,’’ என்றார்.

Related Stories: