நாகர்கோவில் சிறையில் சலுகை? காசி, தந்தை பாளை சிறைக்கு மாற்றம்

நாகர்கோவில்: நாகர்கோவில் சிறையில் இருந்த காசி, அவரது தந்தை உள்பட 3 பேர், பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். சமூக வலைதளங்கள் மூலம் இளம்பெண்களுடன் பழகி அவர்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி பலாத்காரம் செய்ததுடன், லட்சக்கணக்கில் பணம் பறித்த வழக்கில் கைதாகி உள்ள நாகர்கோவில் கணேசபுரத்தை சேர்ந்த காசி (26), நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். சமீபத்தில் இவரை சிபிசிஐடி போலீசார் 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். காசி மீது இதுவரை 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. காசி மீது குண்டர் தடுப்பு காவல் சட்டமும் பாய்ந்தது. விசாரணைக்காக தினமும் கோர்ட்டுக்கு வர வேண்டும் என்ற அடிப்படையில், நாகர்கோவில் சிறையில் அவரை அடைத்து இருந்தனர். கந்துவட்டி வழக்கில் காசிக்கு உதவியதாக அவரது தந்தை தங்கப்பாண்டியன் கைது செய்யப்பட்டார். மேலும் இளம்பெண்களை மிரட்டிய வழக்கில் காசியின் நண்பர்கள் டைசன் ஜினோ, தினேஷ் கைதாகி இருந்தனர். இதில் தினேஷ் ஜாமீனில் வந்து உள்ளார். காசி, அவரது தந்தை தங்கபாண்டியன், நண்பர் டைசன் ஜினோ ஆகிய 3 பேர் நாகர்கோவில் சிறையில் இருந்தனர்.

இந்த நிலையில், நேற்று முன் தினம் திடீரென மூவரும் பாளை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர். பலத்த பாதுகாப்புடன் போலீசார் அவர்களை வேனில் அழைத்து சென்று அடைத்தனர்.நாகர்கோவில் சிறையில் காசியை, பல முக்கிய பிரமுகர்கள், உறவினர்கள் சந்தித்துள்ளனர். செல்வாக்கை பயன்படுத்தி அவர்களுக்கு சிறையில் சலுகைகள் பெற்றுக் கொடுத்ததாக கூறப்படுகிறது.வெளியே இருந்து சாப்பாடு மற்றும் செல்போன் பேச அனுமதி உள்ளிட்ட சலுகைகள் காட்டப்பட்டதாகவும் உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றது. இதன் பேரில் இவர்கள் மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், சிறைத்துறையினர் இது தவறான தகவல், சிறை மாற்றம் என்பது வழக்கமான ஒரு  நடைமுறை தான் என்றனர். எனினும் காசிக்கு, சிறைத்துறையினர் சலுகை காட்டினார்களா?  என்பது பற்றி விசாரணை நடத்த கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: