ஊழல் புகார் சுமத்தப்பட்டுள்ள சூரப்பாவை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: அண்ணா பல்கலைகழக துணைவேந்தர் சூரப்பாவை உடனடியாக தற்காலிக பணிநீக்கம் செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மீதான ஊழல் புகார்களை விசாரிக்க, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ள நிலையிலும் அந்த துணைவேந்தர், எந்தவித உறுத்தலும் இன்றி, பதவியில் தொடருவது கேலிக்கூத்தாக இருக்கிறது. ஒருவேளை, ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஒரு முறை அல்ல பல முறை ஆளான போதும், வழக்குகள் விசாரணைகள் நடைபெறும் போதும் முதல்வரும், அமைச்சர்களும் பதவிகளில் தொடர்ந்து இருந்துவரும் போது, நமக்கு மட்டும் என்ன என்ற எண்ணம் காரணமாக இருக்குமோ என்று மாணவர்கள் மத்தியில் கருத்து ஒன்று சுற்றிக் கொண்டிருக்கிறது.

சூரப்பா மீது பிப்ரவரி மாதத்தில் வந்த புகாரை 9 மாதங்களுக்கு மேல் ஏன் நிலுவையில் வைத்திருந்ததது அதிமுக அரசு. இந்த 9 மாதங்கள் இரு தரப்பிற்கும் இடையில் நடைபெற்ற பேரம் என்ன என்பது தனி விசாரணைக்குட்பட்டது என்றாலும்; இப்போது ஊழல் விசாரணைக்கு உத்தரவிட்ட பிறகும், துணைவேந்தரைப் பதவியில் நீடிக்க அனுமதித்திருப்பது, ஒரு கண்துடைப்பு நாடகமே என்று பலரும் வெளிப்படையாகவே பேசுகிறார்கள். 280 கோடி ரூபாய் ஊழல் புகார்களை விசாரிக்க உத்தரவிட்டுள்ள உயர்கல்வித்துறையின் அரசு ஆணையில், தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் மட்டும் 80 கோடி ரூபாய் லஞ்சம் கைமாறியுள்ளது என்று துணைவேந்தர் சூரப்பா மீதும் அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள துணை இயக்குநர் சக்திநாதன் மீதும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.லஞ்சப்பணம் வசூல் செய்யப்பட்டுள்ளது என்று அரசுக்குத் தெரிந்த பிறகும் முதல்வர் பழனிசாமியும், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனும் அந்த இருவரையும் தற்காலிகப் பணி நீக்கம் செய்யாமல் பாதுகாப்பது ஏன்? அரசு, ஆணையில் குற்றம் சாட்டியும் இதுநாள் வரை துணைவேந்தரையும், துணை இயக்குநரையும் சஸ்பெண்ட் செய்யாமல் இருப்பது திரைமறைவில் என்ன பேரம் நடக்கிறதோ என்ற சந்தேகத்தை அனைவரது மனங்களிலும் எழுப்பியுள்ளது.

கடந்த காலங்களில் இதுபோன்ற ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்த போது, திமுக ஆட்சியில் கோவை அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தராக இருந்த ராதாகிருஷ்ணன் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டார். அதே போல் அதிமுக ஆட்சியின் போது அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் மன்னர் ஜவஹர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இப்போது இவ்வளவு கடுமையான ஊழல் புகாரில், துணைவேந்தராக இருக்கும் சூரப்பாவிற்கு மட்டும் ஏன் விதி விலக்கு. குறிப்பாக ஓய்வு பெற்ற நீதியரசர் கலையரசன் விசாரணை ஆணையம் தனது விசாரணையை துவக்கப் போகிறது என்று செய்திகள் வரும் நிலையில் மனசாட்சியை உலுக்கும் ஊழல் புகார்களுக்கு உள்ளான துணைவேந்தரை உடனடியாக சஸ்பெண்ட் செய்வதுதான் நேர்மையான நியாயமான விசாரணைக்கு வழி விடும்.ஆகவே அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர் சூரப்பாவை இனியும் காலதாமதம் இன்றி உடனடியாக அரசு சஸ்பெண்ட் செய்ய வேண்டும். அது மட்டுமின்றி ஊழல் புகார்கள் தொடர்பான அனைத்து ஆவணங்களும் அழிக்கப்பட்டுவிடாமல் இருக்க உடனடியாக அவை அனைத்தையும் விசாரணை ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும்.இவ்வாறு அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.

‘உங்களது வெற்றியில் உலக வெற்றி அடங்கியுள்ளது’ பத்திரிகையாளர் தினம் மு.க. ஸ்டாலின் வாழ்த்து

பத்திரிகையாளர் தினத்தையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:  பல நேரங்களில் மொத்த ஜனநாயகத்தையும் காக்கும் பெரும் பொறுப்பும் பத்திரிகைத் துறைக்கும், பத்திரிகையாளர்களுக்கும்தான் இருக்கிறது. மக்களுக்கு மட்டுமே உண்மையாக இருக்கும் பெருங்கடமை பத்திரிகையாளர்களுக்கு உண்டு.

ஜனநாயகம், சமத்துவம், சமூகநீதி, மதநல்லிணக்கம், ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் நலன் ஆகியவை எதேச்சதிகார மனம் கொண்டவர்களால் எள்ளிநகையாடப்படும் இந்தச் சூழலில் இவற்றுக்காக போராட, வாதாட, எழுத, எழுதியபடி நிற்க வேண்டிய பெரும் பொறுப்பு பத்திரிகையாளர்களுக்கு உண்டு. அதனை எந்த சமரசங்களுக்கும் இடமளிக்காத வகையில் பத்திரிகையாளர்கள் காக்க வேண்டும் என்று இந்தநாளில் கேட்டுக் கொள்கிறேன். உங்களது வாழ்க்கையே பொதுவாழ்க்கைதான். அத்தகைய பொதுவாழ்க்கைக்கு வந்த பத்திரிகையாளர் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்தான். அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories: