தினமும் 10 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழா நவ.15ல் துவக்கம்-கோயில் பிரகாரத்திலேயே சூரசம்ஹாரம்

திருச்செந்தூர்:  திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுதினம் (15ம் தேதி) துவங்குகிறது. இதில் தினமும் 10 ஆயிரம் பேர் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். சூரசம்ஹாரம் கோயில் வளாகத்திலேயே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுதினம் (15ம் தேதி) துவங்கி 26ம் தேதி வரை 12  நாட்கள் வரை கோயில் பிரகாரத்தில் நடக்கிறது. இதுதொடர்பான முன்னேற்பாட்டு ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி  கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில்  நடந்தது.

 கந்தசஷ்டி திருவிழாவில் சிகரமான சூரசம்ஹாரம் 6ம் நாளான 20ம் தேதியும், திருக்கல்யாண வைபவம் மறுநாளும் (21ம் தேதி) நடக்கிறது. வழக்கமான கோயில் அருகேயுள்ள கடற்கரையில் நடைபெறும் சூரசம்ஹாரம்  இந்த ஆண்டு கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு கோயில் பிரகாரத்தில் நடைபெறும்.

இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. தொலைக்காட்சி மற்றும் உள்ளுர் தொலைக்காட்சி, யூடியுப் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்ய கோயில் நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்படும்.

 சூரசம்ஹாரம், திருக்கல்யாண நிகழ்ச்சியில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இதே போல் கோயில் மற்றும் கோவில் வளாகப் பகுதியில் தங்கவும் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. மேலும் திருச்செந்தூரில் உள்ள விடுதிகள், மடங்கள் மற்றும் மண்டபங்களில் பேக்கேஜ் முறையில் முன்பதிவு செய்து தங்குவதற்கும் அனுமதி இல்லை. கடற்கரை பகுதிக்கு செல்லவும் அனுமதி இல்லை.

சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண நாட்களை தவிர மற்ற நாட்களில் தினமும் காலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை 10 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும். இதில் 50 சதவிதம் ஆன்லைன் பதிவு செய்தவர்களையும், 50 சதவிதம் நேரில் வருபவர்களும் அனுமதிக்கப்படுவர். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அனுமதிக்கப்படும்.

கோயில் நிர்வாகத்தின் மூலம் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் சமுக இடைவெளியை பின்பற்றி வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பக்தர்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து வர வேண்டும். பல்வேறு தற்காலிக கொட்டகைகளை ஏற்படுத்தி கூடுதலாக வரும் பக்தர்களை சமுக இடைவெளியுடன் அமர வைத்து சுவாமி தரிசனத்திற்கு அனுப்ப வேண்டும். கை கழுவுவதற்கான வசதியும், முககவசம், சானிடைசர் வசதியும் ஏற்படுத்தி தர வேணடும்.

தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர், தற்காலிக கழிப்பறை வசதி, மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல்வேறு துறைகளின் மூலம் ஏற்பாடு செய்யப்படும். பக்தர்கள் கோவில் பிரகார பகுதியில் விரதம் இருக்கவோ, அங்கபிரதட்சணம் செய்யவோ அனுமதி இல்லை.

கட்டணம் அடிப்படையில் உபயதாரர்கள் மூலம் கோயில் பிரகாரத்தில் நடைபெறும் தங்கத்தேர் வீதியுலாவும் இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. தனியார் அமைப்புகள் அன்னதானம் வழங்க அனுமதி இல்லை. திருக்கோயில் மூலமாக அன்னதானம் பார்சல் செய்து பக்தர்களுக்கு வழங்கப்படும்.

 இத்தகைய நடைமுறைகளை பின்பற்றி திருச்செந்தூர் சுப்பிரமணிய கோயில் கந்தசஷ்டி திருவிழா நடைபெற உள்ளதாக கூட்டத்திற்கு பின்னர் கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

Related Stories: