பக்தரின் இ-மெயிலுக்கு ஆபாச வீடியோ : பக்தி தொலைக்காட்சி ஊழியர் டிஸ்மிஸ் : திருப்பதி தேவஸ்தானம் அதிரடி

திருமலை, :திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான வெங்கடேஸ்வரா பக்தி தொலைக்காட்சியில் பிறந்த நாள், திருமண நாள் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு ஏழுமலையானின் ஆசீர்வாதம் கிடைக்கும் வகையில் ‘சதமானம்பவதி’ எனும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதன்மூலம் பக்தரின் புகைப்படத்துடன் வாழ்த்து தெரிவிக்கப்பட்டு, தேவஸ்தான அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க வாழ்த்து தெரிவிக்கப்படுகிறது.  

இதற்காக பக்தர்களிடமிருந்து பிறந்தநாள் மற்றும் திருமண நாளுக்காக புகைப்படங்கள் மற்றும் அவர்களின் விவரங்கள் வாழ்த்து தெரிவிப்பவரின் பெயர் உறவு முறை குறித்து கடிதம், இமெயில் மூலமாக பெறப்பட்டு வருகிறது. அவ்வாறு பக்தர்களிடம் இருந்து வரும் இ-மெயில் மற்றும் கடிதங்களுக்கு தேவஸ்தானம் சார்பில் பிரசாதங்கள் அனுப்பப்படுவதோடு, தேவஸ்தான தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட வீடியோ லிங்க்கும் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில், சதமானபவதி நிகழ்ச்சிக்கு இமெயில் அனுப்பிய பக்தர் ஒருவரின் இ-மெயிலுக்கு தொலைக்காட்சியிலிருந்து ஆபாச வீடியோக்களுடன் கூடிய லிங்க் அனுப்பப்பட்டுள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பக்தர், தேவஸ்தான செயல் அதிகாரியிடம் புகார் அளித்தார்.இதையடுத்து, செயல் அலுவலர் ஜவகர் ரெட்டி, அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி இதுகுறித்து முழு விசாரணை நடத்த விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில், தேவஸ்தான விஜிலென்ஸ் மற்றும் சைபர் கிரைம் அதிகாரிகள் என 21 நிபுணர்கள் குழுவினர் தேவஸ்தான தொலைக்காட்சியில் பணிபுரிந்து வரும் ஊழியர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். மேலும், நிபுணர்கள் குழுவினர் தேவஸ்தான தொலைக்காட்சி அலுவலகத்தில் ஆய்வு செய்தனர். அப்போது, தேவஸ்தானத்தின் அலுவலக ஊழியர் ஒருவர் ஆபாச வீடியோ லிங்க் அனுப்பியது தெரிந்தது. அதன்பேரில், அவரை உடனடியாக டிஸ்மிஸ் செய்து தேவஸ்தான நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இதேபோன்று 3, 4 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ெதரிகிறது.

Related Stories: