ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் உணர்வை கொச்சைப்படுத்த வேண்டாம்: முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:   தூத்துக்குடியில் ஜனநாயக ரீதியில் அறப்போராட்டம் நடத்திய அப்பாவிப் பொதுமக்களை எந்தவிதக் காரணமுமின்றிச் சுட்டுவீழ்த்தி, 13 பேர் படுகொலைக்கு முழுக் காரணமாக இருந்து விட்டு, இப்போது தேர்தல் நெருங்குகின்றது என்றதும், ‘இந்தச் சம்பவம் நடப்பதற்கு நான் தான் நூற்றுக்கு நூறு சதவீதம் காரணம்’ என்று என் மீது ‘பச்சைப் பொய்’ கூறி, குற்றம் சாட்டி, நீலிக் கண்ணீர் வடித்திருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மிகக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடியில் வருவதற்கு முழு முதற்காரணம் அதிமுக ஆட்சி. அதிலும் மறைந்த ஜெயலலிதா. ஸ்டெர்லைட் ஆலை அமைக்கத் தடையின்மை சான்றிதழை 1.8.1994 அன்று கொடுத்தது அதிமுக அரசு. முத்தாய்ப்பு வைத்தாற் போல் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு அடிக்கல் நாட்டித் திறந்து வைத்தவர் முதல்வராக இருந்த ஜெயலலிதாதான்.  ‘நீர் மேலாண்மைக்கு திமுக என்ன செய்தது’ என்று இன்னொரு கேள்வியைக் கேட்டிருக்கிறார்.   திமுக ஆட்சியில் 42 அணைகள் கட்டப்பட்டன. எடப்பாடி அதிமுக ஆட்சியில்  இவரது ஊழல் ஆட்சியில், கட்டிய ஒரு அணையின் பெயரைச் சொல்ல முடியுமா?

எனவே, ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்த அப்பாவி மக்களில் 13 பேரைச் சுட்டுக் கொன்று விட்டு, ‘நான் டி.வி.யில்தான் அதைப் பார்த்தேன்’ என்று கூறிய பழனிசாமி, முதல்வர் பதவியிலிருந்து கொண்டு இப்படி பொய் பேசுவதை முதலில் தவிர்க்க வேண்டும்.  தூத்துக்குடி மக்களின் மீது அவருக்குக் கோபம் இருக்கலாம். அதற்காக அவர்களைச் சுட்டதற்காக அமைக்கப்பட்ட கமிஷன் விசாரணையை முடக்கிப் போட்டிருக்கலாம். ஆனால் தங்களது உயிர்களைக் கப்பாற்றிக் கொள்ள, தங்களது சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாத்துக் கொள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்திட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

 

 ‘கெட்டிக்காரர் புளுகு எட்டு நாளைக்கு’ என்பார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமியின் புளுகு எட்டு நொடிக்குக் கூடத்  தாங்காது. அவரால் தாங்க முடியாத அளவுக்கு அது திருப்பித் தாக்கும். ஊழல் மூட்டையோடு சேர்த்துக் கட்டிவைத்துக் கொள்ள வேண்டியது தான். ஆளுவோருக்கு முக்கியமாக வேண்டியது நாவடக்கம்  என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

திமுகவில் 20 லட்சம் பேர் மு.க.ஸ்டாலின் நன்றி

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது:  தமிழகத்தை மீட்டெடுக்க எல்லோரும் நம்முடன் மூலமாக இதுவரை  20 லட்சம் பேர் திமுகவில் இணைந்துள்ளது பெரும் மகிழ்ச்சி. 2021ல் வளமான எதிர்காலத்தை அமைத்திட தொடர்ந்து ஆதரவளித்துக் கொண்டிருக்கும் தமிழக மக்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. நாம் இணைந்து தமிழகம் மீட்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். மு.க.ஸ்டாலின் மற்றொரு வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:  அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடியாக 1997ம் ஆண்டே தகவல் தொழில்நுட்ப கொள்கையை அறிமுகப்படுத்தியவர் தலைவர் கலைஞர்.

தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தையும் இணையத்தின் பாய்ச்சலையும் உணர்ந்து இணையவழியில் திமுக உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது.  இந்த முன்னெடுப்பின் மூலம் இதுவரை 20 லட்சத்திற்கும் மேலானவர்கள் திமுகவில் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். இளைஞர்களும், பெண்களும் பெருமளவில் திமுகவில் இணைந்துள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. கோடிக் கரங்கள் ஒன்று சேரட்டும், தமிழகம் மீட்போம்,  காப்போம், வளம் சேர்ப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: