கமல்நாத்தால் ‘அயிட்டம்’ என விமர்சிக்கப்பட்ட பெண் அமைச்சர் மைத்துனரிடம் தோல்வி

குவாலியர்: முன்னாள் முதல்வர் கமல்நாத்தால் ‘அயிட்டம்’ என்று விமர்சிக்கப்பட்ட மத்திய பிரதேச பெண் அமைச்சர், தனது மைத்துனரிடம் ேதால்வியடைந்தார். மத்திய பிரதேசத்தில் 28 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 20 தொகுதிகளில் பாஜகவும், 8 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் வெற்றிப் பெற்றன. இவர்களில் தாப்ரா சட்டமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர்  இம்ராதி தேவி, அவரது மைத்துனரான காங்கிரஸ் வேட்பாளர் சுரேஷ் ராஜேவிடம் தோற்றார்.

முன்னாள் முதல்வர் கமல்நாத், இம்ராதி தேவி குறித்து பேசிய அநாகரீகமான (அயிட்டம்) வார்த்தைகள், அவரை அவமதிக்கும் பிரச்னையாக பேசப்பட்டது. ஆனால் அதன் விளைவு தேர்தல் முடிவுகளில் எடுபடவில்லை. இப்ராதிக்கு தப்ரா நகரத்தில் மட்டும் ஆதரவும் வாக்குகள் கிடைத்தன. ஆனால் இந்த முறை கிராம வாக்காளர்கள் அவரை நிராகரித்தனர். முதல் ஆறு சுற்றுகளில், இம்ராதி தேவி முன்னிலையில் இருந்த நிலையில், அதன்பின் நடந்த இழுபறிக்கு பின்னர், 14வது சுற்றில் சுரேஷ் ராஜேவிடம் தோற்றார். 2018 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக 57 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

இம்முறை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி  பெறுவேன் என்று ஊடகங்களுக்கு முன்னால் கூறிய அவர், தற்போது தோல்வியை தழுவியுள்ளார். குவாலியர்-சாம்பல் பகுதியில் ஒரு சில இடங்களைத் தவிர, காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் பணிகளை சிறப்பாக செய்யவில்லை என்று, அக்கட்சியினர் தெரிவித்தனர்.

Related Stories: