நிமிடத்துக்கு நிமிடம் மாறிய முடிவுகளால் கடைசி வரை பரபரப்பு பீகாரில் பாஜ கூட்டணி முன்னிலை: கடும் போட்டியை கொடுத்தது ஆர்ஜேடி-காங்கிரஸ் அணி; நிதிஷ்குமாருக்கு மீண்டும் முதல்வர் பதவி கிடைக்குமா?

பாட்னா: பீகார் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று பரபரப்பாக நடந்தது. பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் தலைமையிலான மெகா கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. நிமிடத்துக்கு நிமிடம் முன்னிலை நிலவரங்கள் மாறிய நிலையில், இறுதியில் பாஜ கூட்டணி முன்னிலை பெற்றது. ஆளும் ஐக்கிய ஜனதா தளம் இம்முறை 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதால் மீண்டும் நிதிஷ் குமாருக்கு முதல்வர் பதவி கிடைக்குமா என்பது பெரும் கேள்விக்குறியாகி உள்ளது. பீகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம்  பாஜ கூட்டணி ஆட்சியின் பதவிக்காலம் வரும் 29ம் தேதியுடன் முடிவடைகிறது.

இதையொட்டி, மொத்தமுள்ள 243 தொகுதிகளுக்கும் 3 கட்டமாக தேர்தல் நடந்தது. ஐக்கிய ஜனதா தளம் - பாஜ மீண்டும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இக்கூட்டணியில் இடம் பெற்றிருந்த லோக் ஜனசக்தி கட்சி இம்முறை தனித்து போட்டியிட்டது. லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து மகாகத்பந்தன் என்ற மெகா கூட்டணியை அமைத்து களமிறங்கின. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் தேஜஸ்வியின் மெகா கூட்டணியே அதிக இடங்களை பிடிக்கும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. 38 மாவட்டங்களில் 55 மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. கொரோனா கட்டுப்பாடுகளால் வாக்கு எண்ணிக்கை ஆரம்பத்தில் இருந்தே மந்தகதியில் நடந்தது. ஆரம்பத்தில் இருந்தே பாஜ - ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி இடையே கடும் போட்டி நிலவியது. இரு கூட்டணிக்கு இடையேயான முன்னிலை பெற்ற தொகுதிகள் எண்ணிக்கை வித்தியாசம் மிக சொற்ப அளவிலேயே இருந்து வந்தது.

குறிப்பாக, 3ல் 2 பங்கு தொகுதிகளில் வாக்கு வித்தியாசம் வெறும் 1000 என்ற எண்ணிக்கையிலேயே தொடர்ந்தது. இதனால், அந்த தொகுதிகளின் வெற்றிகள் கணிக்க முடியாத நிலையில் இருந்தன. இம்முறை தனித்து போட்டியிட்ட சிராக் பஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சி அதிக ஓட்டுக்களை பிரித்தது. இதன் காரணமாக, நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. பாஜ, ராஷ்டிரிய ஜனதா தளத்திற்கு பிறகு 3வது இடத்திற்கு ஐக்கிய ஜனதா தளம் தள்ளப்பட்டது.

மெகா கூட்டணியில் போட்டியிட்ட கம்யூனிஸ்ட் கட்சிகள் எப்போதும் இல்லாத வகையில் 19 இடங்களில் முன்னிலை வகித்தன. ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் ரகோபூரிலும், அவரது சகோதரர் தேஜ் பிரதாப் யாதவ் ஹசன்பூர் தொகுதியிலும், பாஜ.வின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள எச்ஏஎம் கட்சியின் பீகார் முன்னாள் முதல்வர் ஜித்தன் ராம் மஞ்சி இமாம்கஞ்ச் தொகுதியிலும் வெற்றி பெற்றனர்.  பிற்பகல் 1.30 மணி வரை 1 கோடி வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், மாலை 5.30 மணிக்கு 2.7 கோடி வாக்குகளே எணணப்பட்டிருந்தன. அதன் பிறகு வாக்கு எண்ணிக்கை வேகமெடுக்க, முடிவுகள் விரைவாக அறிவிக்கப்பட்டன.

இரவு 10 மணி நிலவரப்படி, பாஜ.வின் தேசிய ஜனநாயக கூட்டணி 123 தொகுதிகளிலும், தேஜஸ்வியின் மகாகத்பந்தன் கூட்டணி 113 தொகுதிகளிலும் முன்னிலை வகித்தன. கடைசி வரையில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மகாபந்தன் கூட்டணி கடும் போட்டியை அளித்தது. ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு 122 இடங்களை பெற வேண்டும். பாஜ கூட்டணி தனிப்பெரும்பான்மை பெற்றாலும், ஐக்கிய ஜனதா தளம் இம்முறை 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் அக்கட்சியின் தலைவர் நிதிஷ் குமாருக்கு மீண்டும் முதல்வர் பதவி கிடைக்குமா என்பது பெரும் கேள்விக்குறியாகி உள்ளது.

* தனிப்பெரும் கட்சிக்கு போட்டா போட்டி

தனிப்பெரும் கட்சி விஷயத்திலும் நிமிடத்திற்கு நிமிடம் முடிவுகள் மாறின. பாஜவும், ராஷ்டிரிய ஜனதா தளமும் தனிப்பெரும் கட்சியாக போட்டா போட்டி போட்டன. முதலில் பாஜ தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களை வென்றிருந்த நிலையில், இரவு 9 மணி நிலவரப்படி, ஆர்ஜேடி 76 தொகுதிகளில் முன்னிலையுடன் தனிப்பெரும் கட்சியாக இருந்தது. பாஜ 72 தொகுதிகளில் முன்னிலையுடன் இருந்தது. 115 தொகுதிகளில் போட்டியிட்ட ஐக்கிய ஜனதா தளம் வெறும் 43 தொகுதிகளில் முன்னிலையுடன் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது.

* வால்மீகி மக்களவை தொகுதியில் நிதிஷ் கட்சி வெற்றி

பீகார் சட்டப்பேரவை தேர்தலுடன், அம்மாநிலத்தின் வால்மீகி மக்களவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடந்தது. இதன் வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், ஐக்கிய ஜனதா தள வேட்பாளர் சுனில்குமார் 4,02,629 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரசின் பிரவேஷ் குமார் மிஸ்ரா 3,79,024 வாக்குகளுடன் 2ம் இடம் பெற்றார்.

Related Stories: