பாம்பன் கடலில் பலத்த காற்று; கிரேன் மிதவை மேடையை மீட்கும் பணி தொய்வு: ராமேஸ்வரத்திற்கு ரயில் சேவை நிறுத்தம்

ராமேஸ்வரம்: பாம்பன் கடலில் பலத்த காற்று வீசி வருவதால், நேற்றிரவு பாம்பன் ரயில் பாலத்தில் மோதி நின்ற கிரேன் மிதவை மேடையை மீட்கும் பணி தொய்வு அடைந்தது. இதனால்  ராமேஸ்வரத்திற்கு ரயில் சேவை நிறுத்தப்பட்டது.  ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் கடலில் புதிதாக கட்டப்பட்டு வரும் இரட்டைவழி ரயில் பாலத்தின் கட்டுமானப்பணிகள் கடந்த ஆண்டு துவங்கப்பட்டு கடலில் தூண்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. கப்பல் செல்லும் கால்வாய் பகுதியில் கடலில் தூண்கள் கட்டும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர்.

கட்டுமானப்பணிக்கு தேவையான துளையிடும் இயந்திரம், கிரேன், கான்கிரீட் கலவை இயந்திரம் மற்றும் ஜெனரேட்டர் உள்ளிட்ட இயந்திரங்கள் பொருத்தப்பட்ட மிதவை மேடைகள் தூண்கள் கட்டப்படும் இடத்தில் கடலில் நிறுத்தப்பட்டிருந்தது.

கடந்த 10 நாட்களாக பாம்பன் கடலில் கடல் நீரோட்டம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் கடலுக்குள் நிறுவப்பட்ட இரும்பு உருளை தூண்களில் கயிற்றால் கட்டி நிறுத்தப்பட்டிருந்த மிவை மேடைகள் நீரோட்டத்தில் இழுத்து வரப்பட்டு பாம்பன் பாலத்தில் மோதியது. தொடர்ச்சியாக நான்கு சம்பவங்கள் நடந்துள்ளது. ஆனாலும், ரயில்வே நிர்வாக அதிகாரிகள் இதை கண்டுகொள்ளவில்லை.

இந்த நிலையில், நேற்றிலவு வீசிய பலத்த காற்றினாலும், கடல் சீற்றத்தினாலும் கிரேன் பொருத்தப்பட்ட மிதவை மேடை ஒன்று காற்றின் போக்கில் இழுத்து செல்லப்பட்டு பாம்பன் ரயில் பாலம் அருகில் பாறையில் சிக்கி நின்றது. மிதவை மேடையில் இருக்கும் கிரேன் செங்குத்தாக பாலத்தில் மோதி நிற்பதால் நேற்று இரவு ராமேஸ்வரத்திலிருந்து சென்னைக்கு புறப்பட்டு சென்ற ரயில் பாம்பனில் நிறுத்தப்பட்டது. இரவு நேரத்திலும் கிரேனை மீட்டு அப்புறப்படுத்தும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டனர்.

ஆனால், முயற்சி தோல்வியடைந்ததால் வேறு வழியின்றி சென்னை சேது எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்பட்டு 200க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு டிக்கெட் கட்டணம் திரும்ப வழங்கப்பட்டது. இரவில் தொடர்ந்து பலத்த காற்று வீசியதால் மிதவை படகை மீட்கும் முயற்சி கைவிடப்பட்ட நிலையில் இன்றும் காற்றின் வேகமும், கடல் சீற்றமும் குறையாமல் உள்ளது. இதனால் நேற்று மாலை சென்னையில் புறப்பட்டு இன்று அதிகாலை ராமேஸ்வரம் வரவேண்டிய சேது எக்ஸ்பிரஸ் ரயில் மண்டபம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு பயணிகள் இறங்கி சென்றனர்.

இன்று மாலை சென்னை புறப்பட்டு செல்லும் சேது எக்ஸ்பிரஸ் ரயில் மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்லும். தொடர்ந்து காற்றின் வேகம் அதிகரித்து வரும் நிலையில் பாறையில் சிக்கி பாலத்தில் மோதி நின்ற கிரேன் மேடையை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், கடலில் நிறுத்தப்பட்டுள்ள இயந்திரங்கள் பொருத்தப்பட்ட மற்ற மிதவை மேடைகளும் காற்றின் வேகம் மற்றும் கடல் சீற்றத்தினால் இழுத்து வரப்பட்டு பாலத்தில் மோதும் அபாயமான சூழ்நிலை உள்ளதால் இதனை தவிர்க்க ரயில்வே அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: