பணி செய்ய விடாமல் தடுப்பதாக கூறி தலித் ஊராட்சி தலைவி ராஜினாமா அறிவிப்பு

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கால்பிரவு ஊராட்சி மன்ற தலைவியாக இருப்பவர் ராஜேஸ்வரி. தலித் பெண்ணான இவர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.  இவரிடம், ஊராட்சி தொடர்பாக எந்தவித தகவலும் தெரிவிக்காமல் துணைத்தலைவர் தன்னிச்சையாக செயல்படுவதாக கூறப்படுகிறது. இதனால் வெறுப்படைந்த அவர், ஊரக வளர்ச்சி அலுவலருக்கு ராஜினாமா கடிதம் அனுப்பிருந்தார். அதில், ‘‘கால்பிரவு ஊராட்சித் தலைவராக நான் பதவியேற்று 11 மாதங்கள் கழிந்த நிலையிலும், பஞ்சாயத்து கட்டிட சாவி, மின் மோட்டார் சாவி, காசோலை புத்தகம் வழங்கப்படவில்லை.

தென்னை மரங்களை ஒரு வருட குத்தகைக்கு விடுவது வழக்கம். அதனை ஊராட்சி துணை தலைவர் நாகராஜன் குத்தகைக்கு விடாமல் தடுக்கிறார்’’ என்று  கூறப்பட்டுள்ளது. இதுபற்றி தகவல் அறிந்து வந்த ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் ராஜேஸ்வரியுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த ராஜேஸ்வரி ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெற்றார்.

Related Stories: