ஆமை வேகத்தில் இரட்டை ரயில் பாதை பணி; குமரியில் நிலம் கையகப்படுத்துவதில் தாமதம்: தனி தாசில்தார் உடனடியாக நியமிக்க கோரிக்கை

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் ஆமை வேகத்தில் இரட்டை ரயில் பாதை பணிகள் நடப்பது பயணிகளை கவலை அடைய செய்துள்ளது. மதுரை முதல் கன்னியாகுமரி வரை உள்ள பாதையை இருவழி பாதையாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரம் வரை உள்ள 85 கி.மீ. பாதையை இருவழி பாதையாக மாற்ற ரூ.900 கோடி கொண்ட திட்டத்துக்கு கடந்த 2015-ம் ஆண்டு பட்ஜெட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த திட்டத்தை தெற்கு ரயில்வேயின் கீழ் உள்ள கட்டுமான நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. தற்போது முதல் முன்னுரிமையாக கன்னியாகுமரி - நாகர்கோவில் - இரணியல் பகுதி பணிகள் நடைபெற்று வருகிறது.

நிதி பற்றாக்குறை காரணமாக அவ்வப்போது பணிகள் நிறுத்தி வைக்கப்படுகிறது. மேலும் இந்த வழித்தடத்தில் நில ஆர்ஜித பணிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. ரயில்வே துறையை பொறுத்தவரை நிலங்களுக்கான மதிப்பீடு தொகையை அளித்து விடுவார்கள். மாவட்ட நிர்வாகம் தான் வருவாய்த்துறை மூலம் நிலத்தை ஆர்ஜிதம் செய்து வழங்க வேண்டும். அந்த வகையில் நில ஆர்ஜித பணி இன்னும் மந்தகதியில் தான் உள்ளது. பல்வேறு இடங்களில் அளவீடு பணியை கூட வருவாய்த்துறை முடிக்கவில்லை. நிலமெடுப்புக்கு என தனி தாசில்தார் நியமிக்கப்படவில்லை. இதனால் பல இடங்களில் நில ஆர்ஜிதம் செய்யப்படாமல் இருக்கிறது.

கன்னியாகுமரி - திருவனந்தபுரம் வழித்தடத்தில் கன்னியாகுமரி - நாகர்கோவில் பிரிவில் மட்டும் பணிகள் ஓரளவு நடந்தது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த வழிபாதையில் ரயில் போக்குவரத்துக்கு வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா காரணமாக நிதி ஒதுக்கீடுகள் இல்லாமல் பணிகள் கிடப்பில் சென்றன. எனவே 2022ல் தான் கன்னியாகுமரி - நாகர்கோவில் இரட்டை ரயில் பாதை பணிகள் முடிவடையும் என்ற நிலை உள்ளது. நாகர்கோவிலிருந்து மதுரை வரை உள்ள பாதையை இரு வழிபாதையாக மாற்ற மதுரை - மணியாச்சி - தூத்துக்குடி 159 கி.மீ தூரம் ஒரு திட்டமாகவும், மணியாச்சி - திருநெல்வேலி - நாகர்கோவில் 102 கி.மீ தூரம் ஒரு திட்டமாக என இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படுகிறது.

இதில் மதுரை - மணியாச்சி - தூத்துக்குடி பாதை பணிகளின் திட்ட மதிப்பீடு ரூ.1,182.31 கோடி, நாகர்கோவில் - மணியாச்சி பாதை திட்ட மதிப்பீடு ரூ.1,003.94 கோடி ஆகும். இந்த திட்டத்தை ரயில்வே துறையின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனமான ஆர்.வி.என்.எல். நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இங்கு நிதி பிரச்னை இல்லாததால் ஓரளவு பணிகள் நடக்கின்றன. இந்த பணிகளில் மிகவும் ஆமை வேகத்தில் நடப்பது கன்னியாகுமரி - திருவனந்தபுரம் இடையிலான இரட்டை ரயில் பாதை பணிகள் ஆகும். இந்த வழித்தடங்களில் சிறு பாலங்கள் அமைக்கும் பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளன.

குமரி மாவட்டத்தில் ரயில்வே திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில், தமிழக அரசு மெத்தனமாக செயல்படுகிறது. நிலம் கையகப்படுத்த தனி தாசில்தார் கூட நியமிக்கப்பட வில்லை. எனவே இந்த பணிகளை தமிழக அரசும் வேகப்படுத்தி ரயில்வே துறைக்கு நிலங்களை ஒப்படைக்க வேண்டும். மத்திய அரசிடம் பேசி ரயில்வே திட்டத்துக்கு அதிக நிதியை பெற வேண்டும் என ரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: