பாஜகவுக்கு எதிராக காங்கிரசுடன் கைகோர்த்ததால் மத்திய பிரதேச சாமியார் ‘கம்ப்யூட்டர் பாபா’ கைது: அரசு நிலத்தில் ஆசிரமம் கட்டிய வழக்கில் அதிரடி

இந்தூர்: பாஜகவுக்கு எதிராக காங்கிரசுடன் கைகோர்த்து பிரசாரம் செய்ததால், மத்திய பிரதேச சாமியார் ‘கம்ப்யூட்டர் பாபா’ என்பவர், அரசு நிலத்தை ஆக்கிரமித்து ஆசிரமம் கட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டார். மத்திய பிரதேசத்தில் அரசியல் செல்வாக்குடன் வலம் வந்த ‘கம்ப்யூட்டா் பாபா’ என்று அழைக்கப்படும் நாம்தேவ் தியாகி சாமியார் இந்தூரில் உள்ள 2 ஏக்கர் அரசு நிலத்தில் சட்டவிரோதமாக ஆசிரமம் கட்டியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. முன்னதாக, உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகள், அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதைக் கண்டுபிடித்து ஆசிரம அலுவலக பொறுப்பாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அணுப்பினர்.

இருப்பினும், ஆசிரம நிர்வாகிகள் ஆக்கிரமிப்பை அகற்றாததால், நேற்று அந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதுதொடர்பான வழக்கில் நாம்தேவ் தியாகி சாமியார் நேற்று கைது செய்யப்பட்டார். இதுகுறித்து, காவல் துறை உயராதிகாரி மகேஷ் சந்திர ஜெயின் கூறுகையில், ‘இந்தூரில் அரசு நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட நாம்தேவ் தியாகியின் ஆசிரமம் கட்டிடங்களை அகிகாரிகள் இடித்தபோது அவரும், அவரது ஆதரவாளர்களும் தடுக்க முயன்றனர். இதையடுத்து தியாகியும் அவரது ஆதரவாளர்கள் 6 பேரும் கைது செய்யப்பட்டனர். போலீஸ் விசாரணை முடிவுற்ற நிலையில் இந்தூர் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்’ என்றார்.

கடந்த சில ஆண்டுக்கு சாமியார் நாம்தேவ் தியாகி, பாஜக ஆதரவாளராக இருந்தார். அப்போது அவருக்கு முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மாநில இணை அமைச்சர் பதவியை வழங்கினார். கடந்த 2018ம் ஆண்டில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன், நர்மதை ஆற்றில் சட்டவிரோதமாக ஆளுங்கட்சியினர் மணல் அள்ளுவதாக சாமியார் குற்றம்சாட்டினார். பின்னர், அவர் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாளராக மாறினார். அப்போது நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிப் பெற்றதால், கமல்நாத் முதல்வரான பிறகு, நாம்தேவ் தியாகிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

சில மாதங்களில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளதால், சாமியார் மீது சவுகான் அரசு அருவருக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 3ம் தேதி மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற 28 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், பாஜகவுக்கு எதிராக சாமியார் பிரசாரத்தில் ஈடுபட்டார். மேலும், இந்தாண்டு தொடக்கத்தில் பாஜகவில் சேர்ந்த 22 அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்களை ‘துரோகிகள்’ என்று சாமியார் நாம்தேவ் தியாகி விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: