4 ராணுவ வீரர்கள் மரண சம்பவம்; 50 தீவிரவாதிகள் எல்லையில் ஊடுருவல்: மத்திய புலனாய்வு அமைப்பு எச்சரிக்கை

புதுடெல்லி: தீவிரவாதிகளுடன் ஏற்பட்ட மோதலில் 4 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்த நிலையில், எல்லையில் தீவிரவாத தாக்குதலை நடத்த 50 தீவிரவாதிகள் காஷ்மீருக்குள் நுழைந்துள்ளதாக மத்திய புலனாய்வு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜம்மு - காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தின் மாச்சில் என்ற பகுதியில் தீவிரவாதிகள் அத்துமீறி நுழைந்துள்ளனர். இதையடுத்து, அந்த பகுதியில் ராணுவ வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அப்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகள் பதிலுக்கு துப்பாக்கிச்சூடு நடத்த அதில் எல்லைப் பாதுகாப்புப்படை வீரர் உள்பட 4 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்நிலையில், எல்லையில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதால் அமைதியின்மையை உருவாக்கும் வகையில் காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் தீவிரவாத தாக்குதல் நடத்த சதி செய்து வருவதாக மத்திய புலனாய்வு அமைப்பு (சிஐஏ) தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான அறிக்கையில், ‘ஜம்மு-காஷ்மீரின் மாச்சில் அமைந்துள்ள எல்லை கட்டுப்பாட்டுக் கோடு வழியாக 50 தீவிரவாதிகள் முகாமிட்டுள்ளனர். கெல், தேஜியன் மற்றும் சர்தாரி பகுதிகளை சேர்ந்த லஷ்கர்-இ-தைபா, ஹிஸ்புல் முஜாஹிதீன் போன்ற பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்த 50 தீவிரவாதிகள் எல்லையைத் தாண்டி இந்தியாவிற்குள் ஊடுருவி உள்ளனர். குறிப்பாக மாச்சில் வழியாக ஏராளமான தீவிரவாதிகள் காஷ்மீருக்குள் நுழைய முயன்றனர். இருப்பினும், தீவிர கண்காணிப்பால் ராணுவத்தின் கூட்டு நடவடிக்கை குழு தடுத்துள்ளது. அவர்களின் தீவிரவாத சதி திட்டமும் முறியடிக்கப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: