சாலையை காணவில்லை: சாத்தூர் மக்கள் வைத்த பேனரால் பரபரப்பு

சாத்தூர்: சாத்தூர் நகராட்சிக்குட்பட்ட மேலகாந்திநகர் பகுதியில் பாதாளச்சாக்கடை திட்டத்திற்காக சாலைகள் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. கடந்த இரண்டு மாதங்களாக இந்த பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்தப்பகுதிகளில் குழாய் பதிப்பதற்காக சாலையில் தோண்டப்பட்ட குழிகளை மூடப்படாமல் அப்படியே விட்டு விட்டனர்.

இதனால் இப்பகுதியில் உள்ள தெருக்களில் பொதுமக்கள் நடக்க முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். தற்போது மழை பெய்து வருவதால் சாலையே சேறும், சகதியுமாகவும், குண்டும் குழியுமாக காணப்படுகிறது. ஒரு சில பகுதிகளில் மழைநீர், கழிவுநீருடன் தேங்கி நிற்பதால் சாலையே தெரியவில்லை. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். இதுகுறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் தெரியப்படுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், இந்த பகுதியில் அனைத்து சாலைகளையும் காணவில்லை, அதை கண்டுபிடித்து தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என அறிவிப்பு பேனர் கட்டியுள்ளனர். இனியாவது நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: