கலெக்டர் அலுவலக வளாகத்தில் சுகாதாரக்கேடு: பராமரிப்பற்ற கழிப்பிடத்தால் பொதுமக்கள் அவதி

ஊட்டி: ஊட்டியில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட கழிப்பிடம் பராமரிப்பின்றி துர்நாற்றம் வீசி வருகிறது. ஊட்டி - கூடலூர் சாலையில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொலைபேசி நிலையம், தலைமை அஞ்சல் நிலையம், நீதிமன்றம் உள்ளிட்டவைகளும் செயல்படுகின்றன. கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு அன்றாடம் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். அவ்வாறு வர கூடிய பொதுமக்களின் வசதிக்காக ஊட்டியில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கருவூல அலுவலகத்திற்கு எதிரில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு நவீன கழிப்பிடம் அமைக்கப்பட்டது.

அமைக்கப்பட்ட சில மாதங்கள் முறையாக பராமரிக்கப்பட்ட நிலையில், அதன் பின் பராமரிப்பில் தொய்வு ஏற்பட்டது. இதனால் இக்கழிப்பிடம் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் கழிப்பிட கதவுகள் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் கலெக்டர் அலுவலகத்திற்கு வர கூடிய பொதுமக்கள் கழிப்பிடத்தை பயன்படுத்த முடியாமல், அதன் பின்புறம் உள்ள பகுதியை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். மேலும் கழிப்பிடம் பராமரிப்பு பணி யார் கட்டுபாட்டில் உள்ளது என்ற குழப்பம் நிலவுவதால், அதனை பராமரிப்பதில் சிக்கல் நிலவுகிறது. எனவே இதனை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: