அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவை ஏற்க மறுக்கும் டொனால்ட் டிரம்ப்!: நடந்து முடிந்தது 'திருட்டு தேர்தல்'என வர்ணனை..!!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவை ஏற்க மறுத்து வரும் டொனால்ட் டிரம்ப், நடந்து முடிந்தது திருட்டு தேர்தல் என விமர்சித்துள்ளார். தேர்தலில் முறைகேடு நடக்க வாய்ப்பே இல்லை என வல்லுநர்கள் கூறி வரும் நிலையில், டிரம்ப் தோல்வியை ஒப்புக்கொள்ளாததால் அடுத்து என்ன நடக்கும் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. அமெரிக்க அதிபராவதற்கு தேவையான 270 எலக்டோரல் காலேஜ் வாக்குகளை ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் ஏற்கனவே பெற்றுவிட்டார். 538ல் இன்னும் எஞ்சிய 34 வாக்குகள் யாருக்கு என்பது தெரியாமல் வாக்கு எண்ணிக்கை நீண்டு வருகிறது. அனைத்து வாக்குகளையும் எண்ணுங்கள் என்பதே பைடனின் குரலாகவும் ஒலிக்கிறது. நேர்மையாக தோல்வியை ஒப்புக்கொண்டு பொறுப்பை ஒப்படைக்கும் அதிபர்களை மட்டுமே பார்த்து வந்த அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில் டிரம்ப்பின் நிலை புதிய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. அதற்கு அவர் காரணமாக கூறுவது, தபால் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு என்பதே.

டிரம்பிற்கு நீதிமன்றமும் குட்டு வைத்த நிலையில், வல்லுனர்களும் தபால் வாக்குகளில் முறைகேடு நடக்க வாய்ப்பே இல்லை என கூறி வருகின்றனர். ஆனால் விடாது டுவிட் செய்து வரும் டிரம்ப், இதுவொரு திருட்டு தேர்தல் என வர்ணித்துள்ளார். மேலும் தனது சட்ட போராட்டம், தொடரும் என்றும் டிரம்ப் கூறி வருகிறார். பல்வேறு மாகாணங்களில் டிரம்ப் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆங்காங்கே டிரம்ப் - பைடன் ஆதரவாளர்கள் இடையே மோதல்களும் நிகழ்ந்து வருகின்றன. வரும் ஜனவரி 6ம் தேதி கூடும் அமெரிக்க நாடாளுமன்றத்தில், 270 எலக்டோரல் காலேஜ் வாக்குகளை பெற்றவர் அதிகாரப்பூர்வமாக அதிபராக அறிவிக்கப்படுவார். ஜனவரி 20ம் தேதியே அதிபர் முறைப்படி பதவி ஏற்க முடியும். அதுவரை பல்வேறு சம்ரதாயங்கள் நடக்கவுள்ள நிலையில், டிரம்ப்பின் நடவடிக்கையால் அமெரிக்க அரசியலில் பதற்றம் நிலவுகிறது.

Related Stories: