இளம் வயது செனட்டர் முதல் வயதான அதிபர் வரை: பக்கவாதத்தை வென்று சாதித்தார் பிடென்

அமெரிக்காவின் 46வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பிடென் தனது 50 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையிலும், சொந்த வாழ்விலும் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் சாதனைகள் படைத்து இன்று அரியணை ஏற உள்ளார்.

கடந்த 1972ல் தனது 29வது வயதில் அமெரிக்காவின் இளம் வயது செனட்டராக தேர்வாகி சாதித்த அவர் இன்று 77 வயதில் அதிபராக தேர்வாகி உள்ளார். அவர் கடந்து வந்த  பாதை இதோ... அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் கடந்த 1942ம் ஆண்டு பிறந்த பிடென், டெலவேரில் பள்ளி, கல்லூரி படிப்புகளை முடித்தார். வழக்கறிஞராக வாழ்க்கையைத் தொடங்கி அரசியலில் இறங்கிய அவர், 1972ம் ஆண்டு தனது 29வது வயதிலேயே செனட் சபைக்கு தேர்வாகி அமெரிக்காவின் இளம் செனட்டராக சாதித்தார். ஆனால், அதே ஆண்டில் அவரது சொந்த வாழ்வில் பல இன்னல்கள் ஆரம்பித்தன.

1972ல் நடந்த கார் விபத்தில் பிடெனின் மனைவி நெய்லியாவும், மகள் கிறிஸ்டினாவும் உயிரிழந்தனர். அவரது இரு மகன்கள் பலத்த காயமடைந்தனர். பின்னர், 2 மகன்களுக்காக அடுத்த 5 ஆண்டுகள் கழித்து ஆசிரியை ஜில் ஜேக்கப்சை மறுமணம் செய்து கொண்டார்.  பிடெனின் மகன் ஹண்டர் போதை பழக்கத்தால் வாழ்க்கையில் திசை மாறி போக, மற்றொரு மகனும் டெலாவரின் அட்டர்னி ஜெனரலாகவும் பணியாற்றிய பயூ கடந்த 2015ம் ஆண்டு புற்றுநோய், மூளையில் ரத்தம் கட்டி இறந்தார். பிடெனும் முதுகுவலி, கழுத்து வலி, பக்கவாதம், மூளையில் அறுவை சிகிச்சை என மருத்துவ ரீதியாக பல்வேறு பாதிப்புகளால் அவதிப்பட்டாலும், அந்த வலிகளுடனேயே அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஆறு முறை செனட்டர் ஆக வென்றார்.

தனது 50 ஆண்டு கால அரசியலில் 40 ஆண்டுகள் செனட்டர், 2 முறை துணை அதிபர் என பல்வேறு அரசு பதவிகளை அலங்கரித்தார். அதிபர் ஒபாமா ஆட்சியில் துணை அதிபராக திறம்பட செயல்பட்டார். ஒபாமாவுக்கு மிகவும் நெருக்கமானவராக பிடென் இருந்தார். 1998, 2008ல் அதிபர் வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்த பிடென், 3வது முறையாக இம்முறை வெற்றி பெற்று, அதிபர் பதவிக்கும் தேர்வாகி இருக்கிறார். அதோடு, இளம் செனட்டரான இவர், 77வது வயதில் வெள்ளை மாளிகையில் நுழையும் மிக வயதான அதிபர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆகி இருக்கிறார்.

* பிடென் வெற்றிக்கு உதவிய பெண் ஒபாமா கமலா

அமெரிக்காவின் துணை அதிபராக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா தேவி ஹாரிஸ் (56 வயது) பதவியேற்க உள்ளார். இவர், அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர், இப்பதவிக்கு வரும் முதல் ஆப்ரிக்க-அமெரிக்கர், முதல் இந்திய வம்சாவளி, முதல் ஆசிய அமெரிக்கர் என பலப்பல முதல் முறை சாதனைகள் படைக்க உள்ளார். இவர் தமிழகத்தை சேர்ந்த ஷியாமளா கோபாலனுக்கும், ஆப்ரிக்காவை சேர்ந்த டெனால்ட் ஹாரிசுக்கும் பிறந்தவர். எப்போதும் தன்னை கறுப்பின பெண்ணாகவே அடையாளப்படுத்திக் கொள்ளும் கமலா, பிடெனின் வெற்றிக்கு முக்கிய காரணமாவார்.

இவர் துணை அதிபர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கறுப்பினத்தவர்கள் மற்றும் இந்திய வம்சாவளிகள் பெரும்பாலானோர் ஜனநாயக கட்சி ஆதரவாளர்களாக மாறினர். ‘பெண் ஒபாமா’ என கம்பீரமாக அழைக்கப்படும் கமலாவின் வெற்றியை அமெரிக்க வாழ் இந்தியர்கள் கொண்டாடி வருகின்றனர். அவரது வெற்றி வரலாற்று சிறப்புமிக்க தருணம் என்றும், எதிர்கால இந்திய வம்சாவளி குழந்தைகளுக்கு மிகச்சிறந்த ரோல்மாடலாகவும் அவர் இருப்பதாகவும் பலர் கூறி உள்ளனர்.

* 5 லட்சம் இந்தியர்களுக்கு குடியுரிமை

பிடெனின் வெற்றியால் இந்திய ஐடி ஊழியர்களுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது என்றே கூற வேண்டும். பிடென் தலைமையில் புதிய அரசு பதவியேற்றதும், எச்1பி விசா வழங்கும் வரம்பை உயர்த்த முடிவு செய்துள்ளதாக பிடெனின் பிரசார குழு வெளியிட்டுள்ள கொள்கை முடிவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எச்1பி விசாவை அதிகம் பயன்படுத்துவது இந்திய ஐடி ஊழியர்களே. இதனால், ஆயிரக்கணக்கான இந்திய ஐடி ஊழியர்கள் பலன் அடைவார்கள். மேலும், எச்1பி உள்ளிட்ட விசாக்கள் மீது டிரம்ப் கொண்டு வந்த பல தடைகளையும் பிடென் நிர்வாகம் நீக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுமட்டுமின்றி குடியேற்ற விதிமுறையிலும் பிடென் நிர்வாகம் பல அதிரடி மாற்றத்தை கொண்டு வர இருக்கிறது. ஒவ்வொரு நாட்டுக்கும் நிர்ணயிக்கப்பட்ட கிரீன் கார்டு வழங்கும் நடைமுறையையும் நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்காவில் குடியுரிமைக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான இந்தியர்கள் பலன் அடைவார்கள். அதே சமயம், 5 லட்சம் இந்தியர்கள் உட்பட முறையான ஆவணங்கள் இல்லாத 1.1 கோடி புலம்பெயர்ந்தோருக்கும் குடியுரிமை வழங்க சட்டம் இயற்றப்படும் என்றும் கொள்கை முடிவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

* டிரம்ப்பை கழற்றிவிடும் மனைவி

தேர்தலில் டிரம்ப் தோற்றதால், அவருடைய வாழ்க்கையிலும் புயல் வீசுகிறது. டிரம்ப்பின் மனைவி மெலானியா. இவர், டிரம்ப்புக்கு 3வது மனைவி. இருவருக்கும் 25 வயது வித்தியாசம். திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகின்றன. இந்நிலையில், வெள்ளை மாளிகையை விட்டு டிரம்ப் வெளியேறியதும், அவரை மெலனியா விவகாரத்து செய்து விடுவார் என்று அவருடைய உதவியாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். டிரம்ப் அதிபராக இருக்கும்போது, இந்த காரியத்தை செய்தால் அவருக்கு அவமானம் ஏற்படும் என்றும், தனது அதிகாரத்தை பயன்படுத்தி டிரம்ப் தன்னை அழித்து விடுவார் என்றும் பயந்ததால்தான், நல்ல தருணத்துக்காக மெலனியா காத்திருந்தாக அவர்கள் மேலும் கூறினர். ஆனால், இதில் எந்தளவுக்கு உண்மை இருக்கிறது என்பது தெரியவில்லை.

* தோல்வியை ஏற்கும்படி மருமகன் அறிவுரை

அமெரிக்காவின் புதிய அதிபராக, ஜோ பிடென் பதவி ஏற்பதற்கான ஏற்பாடுகள் துவங்கி உள்ளன. வாக்கு எண்ணிக்கை முடிந்ததும், டிசம்பர் 14ம் தேதி எலக்டோரல் காலேஜ் எனப்படும் 538 வாக்காளர் குழுவினர் அந்தந்த மாகாண தலைமையகத்தில் கூடி புதிய அதிபராக யார் வரவேண்டும் என வாக்களிப்பார்கள். அதன் அடிப்படையில் பிடென் அதிகாரப்பூர்வமாக அதிபராக தேர்வு செய்யப்படுவார். பின்னர், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 20ம் தேதி பிடென் முறைப்படி அதிபராக பொறுப்பேற்றுக் கொள்வார். பிடென் பதவி ஏற்பதற்கு முன்பாக வெள்ளை மாளிகையில் அவர் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும்.

அதற்கு முன்பாக, முரண்டுபிடித்துக் கொண்டிருக்கும் டிரம்ப் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறுவார் என தெரிகிறது. இதற்கிடையே, தேர்தல் தோல்வியை ஏற்க டிரம்ப் மறுத்து வருவதால், உலகளவில் அவருக்கு அவமரியாதை ஏற்பட்டுள்ளது. அமெரிக்க மக்களும் அவருடைய இந்த பிடிவாதத்தை ஏற்கவில்லை. எனவே, தோல்வியை ஏற்றுக் கொண்டு, வெள்ளை மாளிகையில் இருந்து கவுரவமாக வெளியேறலாம் என டிரம்ப்புக்கு அவருடைய மருமகன் ஹெராடு குல்ஷனர் அறிவுரை கூறியுள்ளார்.

* ஆதரவாளர்களும் பிடிவாதம்

டிரம்ப் மாதிரியே அவரது ஆதரவாளர்களும் தோல்வியை ஒப்புக் கொள்ள மறுத்து வருகின்றனர். பிடென் வெற்றி கொண்டாட்டங்கள் ஒருபுறம் நடக்க, மறுபுறம் டிரம்ப் ஆதரவாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். ‘இது முடிவல்ல’, ‘திருட்டை நிறுத்துங்கள்’ என கோஷமிட்டபடி பேரணி சென்றனர். பிடென் பெரும்பான்மை பெற்றதாக வந்த செய்தியை ‘பொய் செய்தி, பொய் செய்தி’ என கோஷமிட்டனர்.

* மோடி, சோனியா வாழ்த்து

பிடென், கமலாவின் வெற்றிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதேபோல், பிரதமர் மோடியும் வாழ்த்து தெரிவித்துள்ளார். டிரம்புக்கு மிகவும் நெருக்கமான நண்பர் என்று அறியப்படுபவர் மோடி. தற்போது, பிடென் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், அவருடன் தான் சேர்ந்து எடுத்துக் கொண்ட பழைய புகைப்படத்தை மோடி நேற்று பகிர்ந்துள்ளார். ‘துணை அதிபராக பதவி வகித்தபோதே இந்திய - அமெரிக்க உறவை வலிமையுள்ளதாக மாற்ற சிறப்பான பங்களிப்பை வழங்கினீர்கள். நம் இருநாட்டு உறவை இன்னும் பல உயரங்களுக்கு எடுத்துச் செல்வோம். இது, உங்களின் கண்கவர் வெற்றி’ என்று வாழ்த்து தெரிவித்துள்ளார் மோடி. கமலா ஹாரிசின் வெற்றியைப் பற்றிக் குறிப்பிடும்போது, ‘இந்திய அமெரிக்கர்களுக்கு இது மகத்தான பெருமைமிக்க தருணம். தடைகளை உடைத்த வெற்றி’ என்று கூறியுள்ளார்.

சோனியா வாழ்த்து: தேர்தல் வெற்றிக்காக பிடென் மற்றும் கமலா ஹாரிசுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாழ்த்து கடிதம் அனுப்பி உள்ளார். கமலா ஹாரிசுக்கு அவர் அனுப்பிய கடிதத்தில், கமலா ஹாரிஸ் துணை அதிபர் ஆவது கறுப்பின அமெரிக்கர் மற்றும் இந்திய அமெரிக்கர்களுக்கு கிடைத்த வெற்றி என குறிப்பிட்டுள்ளார். சில கசப்பான சம்பவங்களால் பிளவுபடுத்தப்பட்ட நாட்டை ஒன்றுபடுத்தவும், காயத்தை குணப்படுத்தவும் கமலா ஹாரிஸ் பாடுபாடுவார் என்பதை தான் அறிந்திருப்பதாகவும் சோனியா கூறி உள்ளார். இந்தியாவும், அமெரிக்காவும் தொடர்ந்து இணைந்து பணியாற்ற வேண்டுமெனவும் அவர் பிடெனிடம் வலியுறுத்தி உள்ளார்.

* மாமா பெருமிதம்

கமலாவின் தாய் ஷியாமளாவுடன் பிறந்த சகோதரரான கோபாலன் பாலசந்திரன், டெல்லியில் வசித்து வருகிறார். அவர் கூறுகையில், ‘‘கமலா மிகச் சிறந்த போராளி. நேற்றும் அவருடன் பேசினேன். அப்போது, நிச்சயம் வெற்றி பெறுவாய் என்றேன். அவரை நினைத்து மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன்,’’ என்றார்.

Related Stories: