அபுதாபியில் குவாலிபயர் 2 போட்டி; ஐதராபாத்-டெல்லி இன்று பலப்பரீட்சை...!! இறுதி போட்டிக்கு தகுதி பெறுவது யார்?

அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் 13வது ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இறுதி போட்டிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி தகுதி பெற்றுள்ள நிலையில் அந்த அணியுடன் மோதப்போவது யார் என்பதை முடிவு செய்யும் குவாலிபயர் 2 போட்டி இன்று நடக்கிறது. அபுதாபியில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்-டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. வார்னர் தலைமையிலான ஐதராபாத் அணி லீக் சுற்றில் கடைசி 3 போட்டிகளில் வலுவான  டெல்லி, பெங்களூரு, மும்பையை வீழ்த்தி 7 வெற்றிகளுடன் பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது. எலிமினேட்டர் போட்டியில் பெங்களூருரை சாய்த்து தொடர்ச்சியாக 4 வெற்றியை ருசித்த உற்சாகத்தில் இன்று களம் காண்கிறது. வார்னர் 4 அரைசதத்துடன் 546, மனிஷ்பாண்டே 404, வில்லியம்சன் 250 ரன் எடுத்துள்ளனர். பேட்டிங்கை விட பந்துவீச்சு தான் சிறப்பாக உள்ளது. ரஷித்கான் 19, நடராஜன் 16, சந்தீப் சர்மா 13, ஜேசன் ஹோல்டர் 13 விக்கெட் எடுத்துள்ளனர். காயம் காரணமாக சகா மற்றும் விஜய் சங்கர் இன்னும் ஆடவாய்ப்பில்லை. வெற்றி பார்முடன் பைனலுக்குள் நுழையும் முனைப்பில் ஐதராபாத் களம் காண்கிறது.

மறுபுறம் லீக் சுற்றில் 8 வெற்றிகளுடன் 2வது இடத்தை பெற்ற டெல்லி, குவாலிபயர் 1 போட்டிகளில் 57 ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் வீழ்ந்தது. தொடரின் ஆரம்பத்தில் வெற்றிகளை குவித்து வந்த டெல்லி, கடைசி 6 போட்டிகளில் 5ல் தோல்வி அடைந்துள்ளது. பிரித்வி ஷா தொடர்ந்து தடுமாறி வருகிறார். தவான் 2 சதத்துடன் 525, ஸ்ரேயாஸ் அய்யர் 433, ஸ்டோனிஸ் 314, ரிஷப் பன்ட் 285 ரன்கள் எடுத்துள்ளனர். பந்துவீச்சில் ரபாடா 25, நார்ட்ஜே 20, அஸ்வின் 13 விக்கெட் எடுத்துள்ளனர். ஆனால் கடந்த போட்டியில் அஸ்வின் தவிர மற்ற அனைவரும் ரன்களை வாரி இறைத்தனர். இதனால் இன்று தவறுகளை திருத்திக்கொண்டு முதன்முறையாக பைனலுக்குள் நுழையும் முனைப்புடன் ஆடும். இதனால் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. அபுதாபியில் பனிப்பொழிவு இருக்கும் என்பதால் 2வது பேட்டிங் செய்வது எளிது. இதனால் டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சையே தேர்வு செய்யும். இங்கு கடைசியாக நடந்த 6 ஆட்டங்களிலும் 2வது பேட் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும்.

அணிகள் விபரம்

ஐதராபாத்: வார்னர் (கேப்டன்), கோஸ்வாமி, மனிஷ் பாண்டே, வில்லியம்சன், பிரியம் கார்க், ஜாசன் ஹோல்டர், அப்துல் சமாத், ரஷித்கான், ஷபாஸ் நதீம், சந்தீப் ஷர்மா, டி.நடராஜன்.

டெல்லி: ஷிகர் தவான், ரகானே, ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), ஹெட்மயர், ரிஷப் பண்ட்,  ஸ்டோனிஸ், பிரித்வி ஷா, அக்‌சர் பட்டேல், அஸ்வின், ரபாடா, நார்ட்ஜே.

Related Stories: