தமிழக அரசின் தடையை மீறி யாத்திரை நடத்தினால் நடவடிக்கை பாயும்: பாஜவுக்கு அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் இலவச வேட்டி, சேலை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஓட்டேரியில் நேற்று நடந்தது. இதில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், கலெக்டர் சீதாலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதையடுத்து, அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: பாஜ வேல் யாத்திரை தொடர்பாக தமிழக அரசு தனது நிலைப்படை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அனைவரும் சட்டத்திற்கு கட்டுப்பட வேண்டும். அது தான் ஜனநாயகத்துக்கு நல்லது. பாஜவிற்கு மட்டும் அல்ல அனைத்து கட்சியினருக்கும் இது பொருந்தும். கொரோனா தற்போது குறைய தொடங்கியுள்ளது. படிப்படியாக கட்டுப்படுகளுடன் கூடிய தளர்வுகள் கொடுத்து வருகிறோம். இரண்டாம் அலை, மூன்றாம் அலை வரக்கூடிய அபாயம் உள்ளது. டெல்லியில் கூட இரண்டாவது அலை ஆரம்பித்து விட்டது.

எனவே, பொது மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வேல் யாத்திரையை அனுமதிக்க முடியாது என உயர் நீதிமன்றதில் தெரிவித்துள்ளோம். கொரோனா காலத்தில் வேல் யாத்திரை வேண்டாம் என பாஜவை கேட்டுக்கொள்கிறோம். அதனை கைவிடுவது தான் அவர்களுக்கும் நல்லது. தடையை மீறி வேல் யாத்திரை நடத்தினால் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்கள் விஷயத்தில் உச்ச நீதிமன்ற  கருத்தை கொண்டு ஆளுநர் விரைவில் நல்ல அறிவிப்பு வெளியிடுவார். ஆன்லைன் சூதாட்ட தடை குறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.

Related Stories: