மத்திய பாஜ அரசின் இந்தி திணிப்பை ஓரணியில் திரண்டு முறியடிக்க வேண்டும்: கே.எஸ்.அழகிரி அழைப்பு

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; இந்தி பேசாத மக்கள் மீது இந்தியை எப்படியாவது திணிக்க வேண்டும் என்கிற முயற்சியில் மத்திய பாஜ அரசு பல்வேறு உத்திகளை கையாண்டு வருகிறது. பிரதமர் மோடி அவ்வப்போது பாரதியாரின் கவிதைகளையோ, திருக்குறளையோ மேற்கோள் காட்டுகிற அதேநேரத்தில் இன்னொரு பக்கம் மத்திய அரசின் பல்வேறு துறைகள் மூலம் இந்தி திணிக்கப்பட்டு வருகிறது. இது பாஜவின் இரட்டை வேடத்தை உறுதிப்படுத்துகிறது.

அதேபோல, இந்தியாவை இணைக்கக் கூடிய மொழியாக இந்தி மொழி மட்டுமே இருக்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சமீபத்தில் பேசியதை எவரும் மறந்திட இயலாது. பன்முக கலாச்சாரமும், பல மொழிகளும் கொண்ட இந்தியாவில், இந்தி ஆதிக்கத்தை நிலைநாட்டுவதை நோக்கமாகக் கொண்ட பாஜவின் இந்தி திணிப்பு முயற்சிகளை தமிழக மக்கள் என்றைக்கும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இத்தகைய போக்குகளை எதிர்த்து தமிழக அரசியல் கட்சிகள் ஓரணியில் திரண்டு முறியடிக்க வேண்டியது மிகமிக அவசியமாகும்.

Related Stories: