பட வசூலில் அனைத்து தியேட்டர்களுக்கு 50% ஷேர் தந்தால் VPF கட்டணம் ஏற்க தயார்...!! தியேட்டர் உரிமையாளர்கள் அறிவிப்பு

சென்னை: பட வசூலில் அனைத்து தியேட்டர்களுக்கு 50% ஷேர் தந்தால் VPF கட்டணம் ஏற்க தயார் என்று தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். அவசர ஆலோசனை நடத்தி பட தயாரிப்பாளர்களுக்கு தியேட்டர் உரிமையாளர்கள் நிபந்தனையை விதித்துள்ளனர். மேலும் தியேட்டர்களுக்கான 50%, 60%, 70% ஷேர்களை ஒரே மாதிரியாக 50% என வழங்க உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கொரோனா ஊரடங்கு சமயத்தில் தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து பிரிந்து தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் உருவானது. இதன் தலைவராக பாரதிராஜா ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.

தலைவரான சில தினங்களில், இனிமேல் வி.பி.எஃப் கட்டணத்தைத் தயாரிப்பாளர்கள் கட்டமாட்டோம் என்று தெரிவித்தார். இந்த முடிவுக்கு திரையரங்க உரிமையாளர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தார்கள். ஆனால், திரையரங்குகள் மூடியிருந்த சமயத்தில் இந்த விஷயங்கள் நடந்ததால் அதோடு முடிக்கப்பட்டது. தற்போது நவம்பர் 10-ம் தேதி முதல் தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்படவுள்ளன. தீபாவளிக்குச் சில படங்களும் வெளியிடத் திட்டமிட்டு வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு மீண்டும் இது தொடர்பான ஒரு அறிக்கையை பாரதிராஜா வெளியிட்டார்.

அதில், தயாரிப்பாளர்கள்‌ அனைவரும்‌ ஒருங்கிணைந்து வெளியிட்டிருந்த கோரிக்கைகளில்‌ ஒன்றைக் கூட திரையரங்க உரிமையாளர்கள் ஏற்றுக்‌கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளதால்‌, நடப்பு தயாரிப்பாளர்கள்‌ சங்கத்தைச் சேர்ந்த அனைத்துத் தயாரிப்பாளர்களும்‌ ஒருங்கிணைந்து, வி.பி.எஃப் கட்டணத்திற்கு ஒரு முடிவு வரும்‌ வரை தங்களின்‌ புதிய திரைப்படங்களை வெளியிடுவதில்லை என்று ஒரு மனதாக முடிவு எடுத்துள்ளோம்.

இந்த வி.பி.எஃப் கட்டணப்‌ பிரச்சினைக்கு முடிவு எட்டும்‌ வரை, அனைத்துத் தயாரிப்பாளர்களும்‌, தங்களின்‌ புதிய படங்களின்‌ வெளியீட்டுத் தேதியை தங்களுடைய சங்க நிர்வாகிகளுடன் கலந்தோசித்து முடிவு எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறோம் என்று பாரதிராஜா தெரிவித்தார். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர்கள் - திரையரங்க உரிமையாளர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர்கள் சார்பில் டி.ராஜேந்தர், கலைப்புலி எஸ். தாணு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதில் வி.பி.எஃப் கட்டணத்தைத் தங்களால் தரமுடியாது என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் கூறியதாகத் தெரிகிறது. நேற்றைய கூட்டத்தில் எந்த சுமுக முடிவும் எடுக்கப்படவில்லை. இதனால் இன்று (மீண்டும் சென்னையில் தயாரிப்பாளர்கள்- திரையரங்க உரிமையாளர்கள் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பட வசூலில் அனைத்து தியேட்டர்களுக்கும் 50% ஷேர் தந்தால் VPF கட்டணம் ஏற்க தயார் என்று தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். தியேட்டர்களுக்கான 50%, 60%, 70% ஷேர்களை ஒரே மாதிரியாக 50% என வழங்க உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: