தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் தனியார் டிவி சேனல் நிர்வாகி அர்னாப் கோஸ்வாமி கைது: மனைவி, மகன் உட்பட 5 பேர் மீதும் வழக்கு

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம், ராய்கட் மாவட்டம், அலிபாக்கை சேர்ந்த கட்டிட உட்புற வடிவமைப்பாளர் அன்வாய் நாயக்கும், அவருடைய தாயாரும் 2018ம் ஆண்டு தற்கொலை செய்தனர். ‘அர்னாப் கோஸ்வாமிக்கு சொந்தமான தனியார் டிவி.யில் செய்த வேலைக்கான ரூ.83 லட்சத்தை தரவில்லை. இதனால்தான் தற்கொலை செய்ய முடிவு செய்தோம்’ என தற்கொலைக்கு முன் எழுதிய கடிதத்தில் அன்வாய் நாயக் குறிப்பிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கு விசாரணை 2019ம் ஆண்டே முடிக்கப்பட்டு விட்டது. இந்நிலையில், இந்த வழக்கை போலீசார் முறையாக விசாரிக்கவில்லை என அன்வாய் நாயக்கின் மகள் அட்னியா நாயக் புகார் செய்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக அர்னாப் கோஸ்வாமி நேற்று காலை கைது செய்யப்பட்டார். அவர் அலிபாக் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது போலீசார் தன்னை தாக்கியதாக நீதிபதியிடம் அவர் கூறினார். கைது நடவடிக்கையின்போது, போலீசாரை அர்னாப் கோஸ்வாமி, அவருடைய மனைவி, மகன் மற்றும் வேறு 2 பேர் தாக்கியதாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர் அர்னாப் கோஸ்வாமி கைதுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், ‘‘அர்னாப் கோஸ்வாமியின் கைது மாநில அரசின் அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகத்தை காட்டுகிறது. கொடுமையான அவசர சட்ட காலத்தை நினைவு படுத்துகிறது,’’ என்றார்.

Related Stories: