கொரோனாவால் வாழ்வாதாரம் இழப்பு: பியூன் வேலைக்கு திரண்ட பட்டதாரிகள்: 2 இடத்திற்கு 478 பேர் போட்டி

ஆத்தூர்: சேலம் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலியாக உள்ள 2 அலுவலக உதவியாளர்கள் பணிக்காக, மாவட்ட நிர்வாக அனுமதியோடு, அறிவிக்கை வெளியிடப்பட்டது. ஒன்றிய அலுவலகத்தின் மூலம், குறைந்தபட்ச கல்வித்தகுதியாக 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. மொத்தம் 528 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில், 143 பெண்கள் உட்பட 478 பேருக்கு, நேர்முகத்தேர்வில் பங்கேற்க கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று காலை 10 மணி முதல் ஒன்றிய அலுவலகத்தில் விண்ணப்பதாரர்களிடம் ஆணையாளர் சந்திரசேகர் மற்றும் பணி நியமனக்குழு உறுப்பினர்களான ஒன்றியக்குழு தலைவர் லிங்கம்மாள், துணைத்தலைவர் கன்னியப்பன் ஆகியோர் நேர்காணல் நடத்தினர்.

மாலை 4 மணி வரை 6 குழுக்களாக இந்த நேர்காணல் நடைபெற்றது. இதில் 8ம் வகுப்பு தேர்ச்சி கல்வி தகுதியாக இருந்த போதிலும், 10ம் வகுப்பு முடித்தவர்கள் 117 பேர், பிளஸ்2 முடித்தவர்கள் 100 பேர் மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் 267 பேரும் கலந்து கொண்டனர். இதுகுறித்து பட்டதாரிகள் கூறுகையில், ‘தற்போது கொரானா ஊரடங்கால் ஏற்கனவே வேலையில் உள்ளவர்கள் நிலையே கேள்விக்குறியாக உள்ளது. புதிய வேலைவாய்ப்பு முற்றிலுமாக முடங்கியுள்ளது. வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களுக்கும் சென்று வேலை பார்க்க முடியாது. எனவேஎந்த வேலையாக இருந்தாலும் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால்  வந்துள்ளோம்’ என வேதனையுடன் தெரிவித்தனர்.

Related Stories: