2வது இடம் பிடித்தது டெல்லி ரன் ரேட் தயவில் தலை தப்பிய ஆர்சிபி!

துபாய்: ஐபிஎல் தொடரின் 13வது சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் 2வது இடம் பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய  நிலையில், பெங்களூர் அணி ரன் ரேட் அடிப்படையில் தகுதி பெற்றது.  துபாயில் நேற்று முன்தினம் நடந்த லீக் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி  பந்துவீச, பெங்களூர் 20 ஓவரில்  7விக்கெட் இழந்து 152 ரன் எடுத்தது. படிக்கல் 50, டி வில்லியர்ஸ் 35 ரன் எடுத்தனர். டெல்லி 19 ஓவரில் 4 விக்கெட்  இழப்புக்கு 154 ரன் எடுத்து வென்றது. ரஹானே 60, ஷிகர் தவான் 54 ரன் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம்  பிளே ஆப் வாய்ப்பை உறுதி  செய்ததுடன் 2வது இடத்தையும் டெல்லி  பிடித்தது. அதனால் மும்பையை போலவே பைனலுக்கு முன்னேறுவதற்கான 2 வாய்ப்புகளை டெல்லியும்  பெற்றுள்ளது.

நீண்ட நாட்களுக்கு பிறகு  டி20 போட்டியில் அரைசதம் விளாசிய ரஹானே வெற்றிக்கு உறுதுணையாக நின்றார். கடந்த 2 போட்டிகளில் மோசமாக  விளையாடிய தவான் அடித்த அரை சதமும் வெற்றிக்கு பக்கபலமானது. முக்கிய 3 விக்கெட்களை அள்ளிய நார்ட்ஜ் 2வது முறையாக ஆட்டநாயகன்  விருது பெற்றார். டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் கூறுகையில், ‘செய்  அல்லது செத்துமடி சூழ்நிலை என்று எங்களுக்கு தெரியும்.  அதனால் நாங்கள்  வெற்றி பெற வேண்டும் என்பதில் கவனம் செலுத்தினோம். ரன் ரேட் குறித்து நாங்கள் கவலைப்படவில்லை. எதிரணியின் பலம், பலவீனங்கள் குறித்து  போட்டிக்கு முன்னதாக விவாதித்தோம். அது நல்ல பலன் தந்தது’ என்றார்.

பெங்களூர் கேப்டன் கோஹ்லி, ‘தகுதிச் சுற்றுக்கு முன்னேறும் அளவுக்கான கிரிக்கெட்டை நாங்கள் விளையோடினோம் என்று நினைக்கிறேன்.  இறுதிப்போட்டிக்கு முன்னேற இன்னும் 2 ஆட்டங்கள் இருக்கின்றன’ என்றார். பெங்களூர் தோற்றாலும், ரன் ரேட் அடிப்படையில் பிளே ஆப் சுற்றுக்கு  முன்னேறி உள்ளது.

Related Stories: