கொரோனாவால் மூடப்பட்டிருந்த ஐகோர்ட் விரைவில் முழுமையாக திறக்கப்படும்: தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தகவல்

சென்னை: கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டு தற்போது குறைந்த அமர்வுகளுடன் நேரடி விசாரணை நடத்தி வரும் நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தை முழு அளவில் விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி வக்கீகள் சங்கங்களிடம் தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக சென்னை உயர் நீதிமன்றம் மார்ச் 25 முதல் முழுவதுமாக மூடப்பட்டது. அதன் பிறகு வீடியோ கான்பரன்ஸ் மூலம் முக்கியமான, அவசரம் வாய்ந்த வழக்குகள் மட்டும் விசாரிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. 6 அமர்வுகளில் மட்டும் இந்த விசாரணை நடந்தது.

அரசு அறிவித்த ஊரடங்கு தளர்வுகளையடுத்து உயர் நீதிமன்றத்தில் நேரடி விசாரணையின் அமர்வுகள் அதிகரிக்கப்பட்டன. அதேபோல் உயர் நீதிமன்ற மதுரை கிளையிலும் நேரடி விசாரணை ஒரு சில அமர்வுகளில் தொடங்கியது. இதை தொடர்ந்து மாவட்ட நீதிபதிகளின் நேரடி விசாரணைக்கு உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக நீதிமன்றங்களில் ஆஜராக முடியாததாலும், வழக்குகளின் வரத்து குறைந்ததாலும் வக்கீல்கள் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, உயர் நீதிமன்றத்தில் நேரடி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று பார்கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், வக்கீல்கள் சங்க தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன் ஆகியோர் தலைமை நீதிபதியிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

மேலும், வக்கீல்கள் அவர்களின் அறைகளுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டிருந்ததை நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டது.

இந்நிலையில், உயர் நீதிமன்றத்தில் முழுவதுமாக நேரடி விசாரணை நடத்தக்கோரி வக்கீல்கள் சங்க தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், துணை தலைவர் ஆர்.சுதா, லா அசோசியேசன் தலைவர் செங்குட்டுவன் ஆகியோர் நேற்று தலைமை நீதிபதி ஏ.பி.சாஹியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். இதை பரிசீலித்த தலைமை நீதிபதி உயர் நீதிமன்றத்தில் முழு அளவில் நேரடி விசாரணை நடத்த விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: