விருதுநகர் பகுதியில் வெட்டுக்கிளி படையெடுப்பால் சோள பயிர்கள் சேதம்; பாலைவன வெட்டுகிளிகள் அல்ல என அதிகாரிகள் தகவல்

விருதுநகர்: விருதுநகர் பகுதி கிராமங்களில் பயிரிடப்பட்டு இருந்த மக்காச்சோள பயிர்கள் வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் சேதமடைந்து வருகின்றன. அதிகாரிகள் ஆய்வில் பாலைவன வெட்டுக்கிளிகள் இல்லை என்பது உறுதியாகி உள்ளது.

பாலைவன வெட்டுக்கிளிகள் கூட்டம், கூட்டமாக ஆப்பிரிக்காவிலிருந்து கிளம்பி அரேபியா, ஈரான், இராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் கடந்து ராஜஸ்தான் வரை வழக்கமாக சேதத்தை ஏற்படும். வெட்டுக்கிளிகளில் ஆயிரக்கணக்கான வகைகள் இருந்தாலும் 27 வகையான வெட்டுக்கிளிகளே சேதத்தை ஏற்படுத்தக்கூடியவை. தமிழகத்திற்குள் பாலைவன வெட்டுக்கிளிகள் வராது என்று கூறினாலும் ஆங்காங்கே பயிர்களை வெட்டுக்கிளிகள் சேதமாக்கும் போது பாலைவன வெட்டுக்கிளிகள் வந்து விட்டதோ என்ற அச்சம் விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டு வருகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் பருவமழை பொய்த்து வெயிலின் தாக்கம் தொடரும் நிலையில், வடகிழக்கு பருவமழை பின்தங்கி கடந்த 2 தினங்களாக பெய்து வருகிறது. மாவட்டத்தில் வழக்கமாக 24 ஆயிரம் ஹெக்டேரில் மக்காச்சோளம் பயிரிடுவது  வழக்கம். தற்போது பருவமழை பின்தங்கிய நிலையில் சுமார் 15,596 ஹெக்டேரில்  மட்டும் மக்கச்சோளம் விதைத்து, 15 முதல் 45 நாட்கள் பயிராக வளர்ந்துள்ளது. இந்நிலையில்  விருதுநகர் அருகே மருளுத்து, சூலக்கரை, மீசலூர் உள்ளிட்ட கிராமங்களில்  மக்காச்சோளம், வெள்ளை, சிவப்பு சோள பயிர்களில் கடந்த சில தினங்களாக  வெட்டுக்கிளிகள் படையெடுத்து சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் சங்க மாநில தலைவர் நாராயணசாமி கூறுகையில், ‘கடந்த 2018ல் படைப்புழு தாக்குதல் காரணமாக மக்கசோளம் பயிரிட்ட விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்தனர். தற்போது மழையின்றி தவிக்கும் நிலையில் 15 முதல் 45 நாட்களாக உள்ள பயிர்களை வெட்டுக்கிளி இருப்பது வேதனை தருகிறது. வேளாண்துறையினரே படைப்புழு தாக்குதலை சாமளிக்க மருந்து தெளித்தது போல், வெட்டுக்கிளிகளை அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதமடைந்த பயிர்களுக்கு நஷ்டஈடு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார். வேளாண்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘சோளப்பயிர்களை தாக்கி இருப்பது பாலைவன வெட்டுக்கிளிகள் அல்ல, வழக்கமான நன்மை தரும் வெட்டுக்கிளிகள் தான். வேளாண் விஞ்ஞானிகள் குழு பார்வையிட்டு, பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் ஒரு லிட்டர் தண்ணீரில் 3 எம்எல் வேப்ப எண்ணெய் கலந்து தெளிக்க பரிந்துரை செய்துள்ளோம்’ என்றனர்.

Related Stories: