திருமணத்துக்காக மதம் மாறுவதை ஏற்க முடியாது: அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு

லக்னோ: ‘திருமணத்துக்காக மதம் மாறுவதை ஏற்க முடியாது,’ என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவை சேர்ந்த இளம் தம்பதியர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த இளம்பெண் முஸ்லிம் மதத்தில் பிறந்து வளர்ந்தவர். கடந்த ஜூலையில் இந்துவாக மதம் மாறி, இந்து வாலிபரை திருமணம் செய்துள்ளார். தங்களின் திருமண வாழ்வில் பெற்றோர் தலையிட தடை விதிக்கும்படி மனுவில் அவர்கள்கூறியிருந்தனர். இந்த மனு அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி மகேஷ் திரிபாதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, ‘மனுதாரர் (இளம்பெண்)கடந்த ஜூன் 29ம் தேதி மதம் மாறியுள்ளார். திருமணம் செய்து கொள்வதற்கு ஒரு மாதம், 2 நாட்கள் முன்னதாக இது நடந்துள்ளது. திருமணத்துக்காக மட்டும் இதுபோல் மதம் மாறுவது ஏற்கக் கூடியதல்ல,’ என உத்தரவிட்டதோடு, தம்பதியரின் மனுவையும் தள்ளுபடி செய்துள்ளார். கடந்த 2014ல், நூர்ஜஹான் பேகம் என்கிற அஞ்சலி மிஸ்ரா என்பவரின் வழக்கில், ‘சம்பந்தப்பட்ட பெண் இஸ்லாமிய மதத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் திருமணத்திற்காக மட்டும் மதம் மாறியுள்ளார். இதை முறையான மதமாற்றமாக ஏற்க முடியாது,’ என தீர்ப்பு கூறப்பட்டது. இதை மேற்கோள் காட்டியே இளம்பெண் வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

Related Stories:

>