கனமழை எச்சரிக்கை எதிரொலி : பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்: மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு அறிவுரை

சென்னை,:கனமழை எச்சரிக்கை எதிரொலி பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகளை தீவிரமாக கண்காணிக்க மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று முன்தினம் தொடங்கியது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்றுமுன்தினம், நேற்றிரவு மழை பெய்தது. இந்த மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய 4 ஏரிகளின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. இந்நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதைத் தொடர்ந்து, மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் சார்பில் வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, பொதுப்பணித்துறை நீர்வளப்பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், பூண்டி ஏரியில், 43 சதவீதம் நீர் இருப்பு, செம்பரம்பாக்கம் ஏரியில் 61.8 சதவீதம் உள்ளது. அடையாறு நீர்பிடிப்பு பகுதியான நேமம் ஏரியில் 10 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர் ஏரியில் 60 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. கொசஸ்தலை ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதியான நகரியில் 46 சதவீதம், நந்தியில் 11 சதவீதம், பூண்டி நீர்ப்பிடிப்பு பகுதியில் 52 சதவீதம் உள்ளது. இன்னும் 2 முதல் 3 நாட்கள் தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் பூண்டி மற்றும் செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளவை எட்ட வாய்ப்புள்ளது.

இந்த மாதிரியான காலகட்டத்தில் ஏரிகளின் கீழ் பகுதியில் வெள்ள பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, ஏரிகளை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். மேலும், 85 முதல் 90 சதவீதம் வரை ஏரிகளின் நீர் மட்டம் வருவதற்குள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்நிலையில் கடந்த 2015 டிசம்பர் பெய்த மழை காரணமாக அடையாறு, கொசஸ்தலை ஆற்று பகுதிகளில் கரைபுரண்டு ஓடிய வெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், இது போன்று மீண்டும் அசம்பாவித சம்பவம் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.

Related Stories:

>