71 தொகுதிகளில் வாக்குப்பதிவு பீகாரில் இன்று முதல் கட்ட தேர்தல்

பாட்னா: பீகார் மாநிலத்தில் முதல் கட்டமாக 71 சட்டப்பேரவை  தொகுதிகளுக்கான  வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. மொத்தம் 1,066 வேட்பாளர்கள் களத்தில்  உள்ளனர். பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெறுகிறது.  முதல் கட்டமாக இன்று 6 மாவட்டங்களில் உள்ள 71 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடக்கிறது.  கொரோனா நோய் தொற்று அச்சுறுத்தல்கள் காரணமாக பல்வேறு வழிகாட்டு  நெறிமுறைகளுடன் மக்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  பல்வேறு  கட்சிகளை சேர்ந்த மொத்தம் 1066 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில்  952 பேர் ஆண் வேட்பாளர்கள், 114 பெண் வேட்பாளர்கள். ஆளும் ஐக்கிய ஜனதா தளம் 35 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான பாஜ 29 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

அதேபோல், பிரதான எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் 42 இடங்களிலும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி தனித்து போட்டியிடும் சமீபத்தில் மறைந்த ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி 41 இடங்களிலும் போட்டியிடுகின்றன. இக்கட்சிக்கு தற்போது பஸ்வானின் மகன் சிராக் பஸ்வான் தலைமையேற்று உள்ளார்.  கொரோனா  நோய் பரவுவதை தவிர்க்கும் வகையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்  சுத்திகரித்தல், முகக்கவசம் அணிவது, இதர பாதுகாப்பு நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும்,  தெர்மல் ஸ்கேனர், சானிடைசர், சோப்பு  மற்றும் தண்ணீர் உள்ளிட்டவை கிடைப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.  மேலும், பாதுகாப்பு பணியில் 30 ஆயிரம் போலீசாரும், துணை ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

ஊர்வலத்தில் வன்முறை  வாலிபர் சுட்டுக்கொலை

நாடு முழுவதும் தசரா பண்டிகைக்காக வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்ட துர்கா தேவி சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்ச்சிகள் நடக்கிறது. பீகார் மாநிலம், முன்கர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு துர்கா தேவி சிலைகளை கரைக்க மக்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். அப்போது, போலீசார் மீது சிலர் கற்களை வீசியதால், தடியடி நடத்தப்பட்டது. இதனால், அங்கு வன்முறை வெடித்தது. அப்போது, கூட்டத்தில் இருந்து மர்மமான முறையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 20 வயது வாலிபர் இறந்தார். தடியடி, கல்வீச்சு சம்பவத்தால் பலர் காயமடைந்தனர். பீகாரில் முதல் கட்ட தேர்தல் இன்று நடக்க உள்ள நிலையில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: