வெளிமாநில மீன்களை விற்க கூடாது; நவீன மீன் அங்காடியை முற்றுகையிட்ட மீனவர்கள்: புதுச்சேரியில் பரபரப்பு

புதுச்சேரி: புதுச்சேரி நவீன மீன் அங்காடியில் வெளிமாநில மீன்களை விற்கக் கூடாது என  மீனவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி காந்தி வீதியில் ஒரு மீன் மார்க்கெட்டும், லாஸ்பேட்டை இசிஆர் சாலையில் ஒரு நவீன மீன் அங்காடியும் செயல்பட்டு வருகிறது. இங்கு புதுச்சேரி மட்டுமல்லாது தமிழகத்தில் இருந்து கொண்டுவரப்படும் மீன்களும் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் வியாபாரிகள் வெளிமாநில மீன்களை மட்டுமே வாங்குவதாகவும், புதுச்சேரி மீன்களை தவிர்ப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனை கண்டித்து தேங்காய்த்திட்டு, வீராம்பட்டினம் பகுதிகளில் உள்ள 50க்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று காலை நவீன மீன் அங்காடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது,  புதுச்சேரி மீனவர்கள் பிடிக்கும் மீன்களை மட்டும் விற்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி மீன் வியாபாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், வெளிமாநில மீன்களை விற்பனை செய்யவும் அரசு அனுமதிக்கக் கூடாது என கோரிக்கை வைத்தனர். இதனால் பதற்றமான சூழல் நிலவியது. இத்தகவறிந்து சம்பவ இடத்துக்கு வந்த லாஸ்பேட்டை போலீசார் இருதரப்பினரிடமும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

ஆனால், மீன் விற்பனை முடியாமல் பேச்சு வார்த்தைக்கு வர முடியாது என வியாபாரிகள் கூறிவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த மீனவர்கள் இப்பிரச்னை குறித்து மீன்வளத்துறையில் முறையிட உள்ளதாக கூறிவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: