ரிசர்வ் வங்கியின் கடன் சீரமைப்பு திட்டத்துக்கு வரவேற்பில்லை: ஆர்வம் காட்டாத நிறுவனங்கள்; வங்கிகள் தகவல்

புதுடெல்லி: ரிசர்வ் வங்கியின் கடன் மறு சீரமைப்புத் திட்டத்துக்கு பெரிய நிறுவனங்கள் ஆர்வம் காட்டவில்லை என வங்கிகள் தரப்பில் கூறப்படுகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் நாட்டின் தொழில்துறைகள் முடங்கின. நிறுவனங்களும் செயல்படவில்லை. இதனால் கடும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. கடன் சுமையும் அதிகரித்துள்ளது. ரிசர்வ் வங்கி கடந்த மாதம் சமர்ப்பித்த கே.வி.காமத் அறிக்கையின்படி, பெரு நிறுவனங்களின் கடன் ரூ.15.52 லட்சம் கோடி, கொரோனாவால் வராக்கடனாகும் அபாயத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டாலும், அவை கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தில் இருந்து மீள வழிவகுப்பதாக அமையவில்லை. இந்நிலையில், கடன் மறு சீரமைப்பு திட்டத்தை ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்த திட்டத்தில் கடன்களை மறு சீரமைப்புச் செய்யும் நிறுவனங்கள், வராக்கடனாக கருதப்பட மாட்டாது என கூறப்பட்டது. இருப்பினும், இந்த திட்டத்தில் வங்கிகள் ஆர்வம் காட்டவில்லை என வங்கிகள் தரப்பில் கூறப்படுகிறது. இதுகுறித்து வங்கி அதிகாரிகள் சிலர் கூறுகையில், ‘‘நிறுவனங்கள் கடன் மறு சீரமைப்பு திட்டத்துக்கு ஆர்வம் காட்டவில்லை. இதுதொடர்பாக நான்கைந்து நிறுவனங்கள்தான் விசாரித்துள்ளன. அவையும் சீரமைப்பை செயல்படுத்த முன்வரவில்லை. கடன் மறு சீரமைப்பால் தங்கள் நிறுவனத்தின் தர குறியீடு பாதிக்கப்படலாம். ரேட்டிங் நிறுவனங்கள் குறைத்து மதிப்பிட்டால் என்ன செய்வது என்ற கலக்கமும் காணப்படுகிறது’’ என்றனர்.

Related Stories: