2023-24 நிதியாண்டில் 43.90 சதவீதம் உயர்வு; இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் வணிகம் ரூ5,04,923 கோடி: நிர்வாக இயக்குநர் தகவல்

சென்னை: சென்னை அண்ணா சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தலைமை அலுவலகத்தில் 2023-24ம் நிதியாண்டின் நிதிசார் முடிவுகள் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. அப்போது வங்கியின் தலைமை நிர்வாக இயக்குனர் அஜய்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மொத்த வணிகம் 43.90 சதவீதம் உயர்ந்து ரூ5,04,923 கோடியாக அதிகரித்து உள்ளது. கடந்த நிதியாண்டின் இறுதியில் நிகர லாபம் ரூ2099 கோடி ஆக இருந்தது. தற்போது அது அதிகரித்து ரூ2,656 கோடி என்ற அளவை எட்டியிருக்கிறது. மேலும் 4வது காலாண்டில் நிகர லாபம் மார்ச் 2023ம் ஆண்டில் ரூ650 கோடியாக இருந்தது, அது 26.54 சதவீதம் உயர்ந்து மார்ச் 2024ம் ஆண்டில் ரூ808 கோடியாக உள்ளது. அதேபோல செயல்பாட்டுக்கான லாபம் ரூ1,882 கோடியிலிருந்து 13.83 சதவீதம் உயர்ந்து ரூ1,961 கோடியாக உள்ளது.

நிகர வட்டி வருவாய் ரூ5,192 கோடியில் இருந்து ரூ6,629 கோடியாக அதிகரித்து உள்ளது. இந்த ஆண்டு 88 புதிய கிளைகளை நிறுவ திட்டமிட்டு இருக்கிறோம். எங்கள் வங்கியில் பல்வேறு புதுமையான சேமிப்பு திட்டங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம். 3 புதிய வகையிலான கிரெடிட் கார்டுகள் மற்றும் ஆன்லைன் லாக்கர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மக்கள் எளிதில் பரிவர்த்தனைகளை செய்ய பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். குறிப்பாக யுபிஐ மூலம் ஏடிஎம்களில் சேமிப்பு கணக்குகளில் பணம் எடுக்கும் வசதியை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post 2023-24 நிதியாண்டில் 43.90 சதவீதம் உயர்வு; இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் வணிகம் ரூ5,04,923 கோடி: நிர்வாக இயக்குநர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: