சிவகளையில் தொல்லியல் துறை முதல்கட்ட அகழாய்வு பணி நிறைவு: 70 குழிகள் மூடல்

ஏரல்: சிவகளையில் தொல்லியல் துறையின் முதற்கட்ட அகழாய்வு பணி நிறைவுபெற்றது. இதற்காக தோண்டப்பட்ட 70 குழிகள் ஜேசிபி மூலம் மூடப்பட்டன. தூத்துக்குடி மாவட்டம்,  ஏரல் அருகே சிவகளை பரும்பு பகுதியில் தொல்லியல் களத்தை கண்டறிந்த அதிகாரிகள், கடந்த மே 25ம் தேதி அங்கு அகழாய்வு பணிகளை மேற்கொள்ளத் துவங்கினர். அகழாய்வு கள அதிகாரிகள் பிரபாகரன்,  தங்கத்துரை தலைமையில் நடந்த இப்பணியில் தொல்லியல்துறை ஊழியர்கள், உள்ளுர் பணியாளர்கள் என  50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சிவகளை பரும்பு  அருகே வலப்பான்பிள்ளை திரட்டில் முன்னோர்கள் வாழ்ந்த பகுதியை கண்டறிவதற்கான ஆய்வுப் பணி கடந்த ஜூன் 28ம் தேதி துவங்கியது.

 இதில் 30 பணியாளர்கள்  ஈடுபட்டு வந்தனர். இந்த அகழாய்வு பணியில் 34  முதுமக்கள் தாழிகளும்,  தமிழ் பிராமி எழுத்துக்கள் கொண்ட மண் பானை ஓடுகளும், நெல்மணிகள், அரிசி,  மனிதனின் தாடை எலும்பு கூடுகள், தாடை எலும்பு, பற்கள் என 500க்கும்  மேற்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.இந்த அகழாய்வு பணியானது கடந்த செப்.  30ம் தேதி நிறைவுபெற்றது. இதையடுத்து அகழாய்வு குழியில் இருந்த முதுமக்கள்  தாழிகளை எடுக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. இப்பணிகளும்  முடிவடைந்த நிலையில் இதற்காகத்  தோண்டப்பட்ட 70 குழிகளை ஜேசிபி மூலம் மூடும் பணி கள அதிகாரிகள் பிரபாகரன்,  தங்கத்துரை முன்னிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் துவங்கியது.

தற்போது அனைத்துக் குழிகளும் மூடப்பட்டுள்ளன.  இதையடுத்து கண்டெடுக்கப்பட்ட பொருட்களை ஆவணப்படுத்தும் பணி நடந்தது.  சிவகளையில் கள ஆய்வில் கண்டறியப்பட்ட பொருட்கள் ஆய்விற்காக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், இவற்றில் ஒரு சில  மாதிரிகள் மண் சார்ந்த ஆய்வுகளுக்காக  லக்னோ பீர்பால் ஆய்வுமையத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Related Stories: