பாஜ.வோட ஐடியா அமெரிக்கா வரை போயிடுச்சு... தேர்தல்ல ஜெயிச்சா கொரோனா தடுப்பூசி ப்ரீ: அதிபர் வேட்பாளர் பிடென் திடீர் வாக்குறுதி

வாஷிங்டன்:  அமெரிக்காவின் டெலாவரில் நேற்று முன்தினம் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிடென், ‘தேர்தலில் நான் வெற்றி பெற்றால்  அமெரிக்க மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்படும்,’ என அதிரடியாக வாக்குறுதி அளித்தார். இது, உலகளவில்  பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனெனில், பீகார் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் பாஜ., சில தினங்களுக்கு முன் தேர்தல்  அறிக்கை வெளியிட்டது. அதில், ‘பாஜ வெற்றி பெற்றால், பீகார் மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து இலவசமாக வழங்கப்படும்,’ என  வாக்குறுதி அளிக்கப்பட்டது. இந்நிலையில், பாஜ.வின் அறிவிப்பு வெளியிடப்பட்ட ஓரிரு நாட்களில் அமெரிக்காவில் பிடென் இதே வாக்குறுதியை  அளித்து இருப்பதுதான், இந்த ஆச்சர்யத்துக்கு காரணம்.

பிடென் தனது பிரசாரத்தில் பேசுகையில், ‘‘அமெரிக்காவில் கொரோனாவால் 2.2 லட்சம் பேர் இறந்துள்ளனர். அமெரிக்க மக்கள் கொரோனாவுடன்  வாழ்வதற்கு அல்ல; இறப்பதற்கு கற்றுக் கொண்டுள்ளனர். கொரோனா வைரசை எதிர்ப்பதற்கான திட்டங்கள் எதுவும் அதிபர் டிரம்ப்பிடம் இல்லை. நான்  அதிபரானால், பொது இடங்கள், அரசு அலுவலகங்கள் உட்பட எல்லா இடத்திலும் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்குவேன். ஏனென்றால்,  முகக்கவசம் உயிரை காக்கிறது. மேலும், தேர்தலில் நான் வெற்றி பெற்றால், இன்சூரன்ஸ் இல்லாதவர்கள்,  மருத்துவ உதவி பெறும் வசதி  இல்லாதவர்கள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் கொரோனா தடுப்பு மருந்தை இலவசமாக வழங்குவேன்,” என்றார்.

தனக்கு தானே ஓட்டு போட்டு கொண்ட டிரம்ப்

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் அடுத்த மாதம் 3ம் தேதி நடக்க உள்ள நிலையில், ஒரு சில மாகாணங்களில் கூட்டத்தை தவிர்க்க முன்கூட்டியே  வாக்களிக்குோம் வசதி செய்யப்பட்டுள்ளது. தபால் வாக்குப்பதிவு நடந்த போதிலும் அதை அலட்சியப்படுத்தி விட்டு, தனது சொந்த மாகாணமான  புளோரிடாவில் அதிபர் டிரம்ப் நேரில் சென்று வாக்களித்து தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். வெஸ்ட் பாம் பீச் நகரின் நூலகம் ஒன்றில்  அமைக்கப்பட்ட வாக்குப்பதிவு மையத்திற்கு சென்று அவர் வாக்களித்தார். அங்கு கூடியிருந்த அவருடைய ஆதரவாளர்கள், ‘இன்னும் 4 ஆண்டுகள் ’  என கோஷமிட்டு வரவேற்றனர். ஓட்டு போட மாஸ்க் அணிந்தபடி சென்ற டிரம்ப், வெளியில் வந்ததும் மாஸ்க்கை கழற்றிவிட்டு பேட்டி கொடுத்தார்.  ‘யாருக்கு ஓட்டு போட்டீர்கள்’ என செய்தியாளர்கள் கேட்க, ‘‘டிரம்ப்ங்கிற ஒரு ஆளுக்கு ஓட்டு போட்டேம்பா,’’ என நக்கலாக பதிலளித்து விட்டு  சென்றார்.

Related Stories: