இதற்கு முன் ஆட்சி செய்தவர்கள் பீகார் வளர்ச்சியை கண்டு பொறாமைப் படுகின்றனர்: தேர்தல் பிரசாரத்தில் மோடி பேச்சு

கயா: பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. வருகிற 28ம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்களின் பிரசாரம் சூடுபிடித்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் நேற்று இம்மாநிலத்தில் ஒரே நேரத்தில் தங்கள் பிரசாரத்தை தொடங்கினர். இதனால், பிரசாரத்தில் அனல் பறந்தது.  சசராம் பகுதியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மோடி பேசியதாவது:  பீகாரில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். தேர்தலுக்கு முன்பாகவே மக்கள் தங்கள் விருப்பதை தெரிவித்துள்ளனர். அனைத்து கருத்து கணிப்புக்களிலும் தேசிய ஜனநாயக கூட்டணியே மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கூறியுள்ளன.

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது சட்டப் பிரிவை  தேசிய ஜனநாயக கூட்டணி ரத்து செய்தது. இவர்கள் (காங்கிரஸ் கூட்டணி) ஆட்சிக்கு வந்தால் மீண்டும் அந்த சிறப்பு பிரிவை கொண்டு வருவோம் என்கிறார்கள். இதனை சொன்ன பிறகும், பீகாரில் தைரியமாக வந்து வாக்கு கேட்கிறார்கள். இது பீகாரை அவமதிக்கும் செயல் அல்லவா? நாட்டை பாதுகாப்பதற்காக தனது மகன்களையும், மகள்களையும் இந்த மாநிலம் எல்லைக்கு அனுப்பி வைத்திருக்கிறது.

நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு முன்னதாக பீகார் மாநிலம், குற்றங்களாலும் ஊழல்களாலும் பாதிக்கப்பட்டு இருந்தது.

பீகாரை ‘பிமாரு’வாக (பொருளாதாரத்தில் நலிந்த மாநிலமாக) மாற்றிய வரலாற்றை கொண்டவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு மக்கள் அனுமதிக்கக் கூடாது என்று முடிவு செய்துள்ளனர். ஒரு காலத்தில் பீகாரை ஆட்சி செய்தவர்கள், தற்போதைய அதன் வளர்ச்சியை பொறாமை கண்களால் பார்த்து வருகிறார்கள். ஆனால், பீகாரை பின்னோக்கி தள்ளியது யார் என்பதை மக்கள் மறந்து விடக் கூடாது.

இவ்வாறு அவர் பேசினார்.

9ம் தேதி லாலு வருகிறார் 10ம் தேதி நிதிஷ் போகிறார்

நவாடா மாவட்டம், ஹிசுவா நகரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் மெகா கூட்டணி மற்றும்  ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவரும், முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் பேசுகையில், ‘‘கால்நடை தீவன ஊழல் வழக்கில் ஜாமீன் கிடைத்து நவம்பர் 9ம் தேதி, எனது பிறந்த நாளன்று, லாலு வெளியே வருகிறார். அடுத்த நாள், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் நாள், முதல்வர் நிதிஷ் குமாரின் இறுதி நாளாகும். 15 ஆண்டு கால ஆட்சியில், வேலை வாய்ப்பு, கல்வி, தொழிற்சாலை, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தராதவர், அடுத்த 5 ஆண்டுகளிலும் ஒன்றும் செய்ய போவதில்லை. கொரோனா தொற்றினால் 144 நாட்கள் வீட்டை விட்டு வெளியேறாதவர், முதல்வர் நாற்காலி வேண்டும் என்பதால் தற்போது மட்டும், ஓட்டு கேட்டு வெளியே வந்துள்ளார்.’’ என்றார்.

இலவச கொரோனா தடுப்பூசி பாஜ.வின் வாக்குறுதி தவறா?

‘பீகாரில் ஆட்சி அமைத்தால் மக்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி வழங்கப்படும்,’ என நேற்று முன்தினம் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பாஜ கூறியது பெரும் சர்ச்சையாகி இருக்கிறது. இதற்கு, ‘இந்த தடுப்பூசி எல்லா மக்களுக்கும் பொதுவானது; அதை வைத்து பாஜ அரசியல் செய்வது மோசமானது,’ என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆனால், இதுபோன்ற தேர்தல் வாக்குறுதியில் தவறில்லை என முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்கள் கூறியுள்ளனர். ஓய்வு பெற்ற முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் கூறுகையில், ‘‘ஒருவர் தேர்தல் அறிக்கையில் என்ன வேண்டுமானாலும் சொல்ல உச்ச நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

ஆனால், அந்த வாக்குறுதியை நிறைவேற்ற, பட்ஜெட்டில் எவ்வளவு நிதி ஒதுக்கப்படும் என்று குறிப்பிட வேண்டும் என கூறியுள்ளது,’’ என்றார். முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி கூறுகையில்,  ‘`சட்டப்படி எதை வேண்டுமானாலும் தேர்தல் அறிக்கையில் கூறலாம். இருப்பினும், நியாயமற்றதாக இருக்கக் கூடாது. நடத்தை விதிகள் என்பது விதிமுறைகள் தானே தவிர, சட்டம் அல்ல. எனவே, இலவச கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்ற அறிவிப்பு சட்டப்படி தவறல்ல,’’ என்றார்.

Related Stories: