தீவிரவாதத்துக்கு நிதியுதவி செய்வதால் சாம்பல் பட்டியலில் பாகிஸ்தான் நீடிக்கும்: நிதி நடவடிக்கை பணிக்குழு அறிவிப்பு

பாரிஸ்: பாகிஸ்தானை அடுத்தாண்டு பிப்ரவரி வரையில் சாம்பல் பட்டியலில் வைத்திருக்க, நிதி நடவடிக்கை பணிக்குழு முடிவு செய்துள்ளது. தீவிரவாதத்தை ஊக்குவித்தல், நிதி மோசடிகளில் ஈடுபடுதல் போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நாடுகளை, ‘நிதி நடவடிக்கை பணிக்குழு’ என்ற சர்வதேச அமைப்பு கண்காணித்து வருகிறது. அதன்படி, தீவிரவாத அமைப்புகளை ஊக்குவித்து, அவற்றுக்கு நிதியுதவி செய்து வரும் பாகிஸ்தானை இக்குழு,  சர்வதேச தடைக்கான சாம்பல் நிற பட்டியலில், கடந்த 2018ல் சேர்த்தது.  இதில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்றால், 27 நிபந்தனைகளை நிறைவேற்றும்படி பாகிஸ்தானுக்கு உத்தரவிட்டது. ஆனால், இதுவரையில் 21 நிபந்தனைகளை மட்டுமே நிறைவேற்றியுள்ள பாகிஸ்தான், தீவிரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி அளிப்பதை நிறுத்துவதற்கான 6 நிபந்தனைகளை நிறைவேற்றவில்லை.

பாரிசில் கடந்த 21ம் தேதி முதல் நேற்று வரையில் நடந்த இந்த பணிக்குழுவின் ஆலோசனை கூட்டத்தில், இது பற்றி ஆலோசிக்கப்பட்டது. பின்னர், 6 நிபந்தனைகளை நிறைவேற்ற தவறியதற்காக அடுத்தாண்டு பிப்ரவரி வரையில் பாகிஸ்தானை சாம்பல் நிற பட்டியலில் வைத்திருக்க முடிவு செய்யப்பட்டது. நேற்று அளித்த பேட்டியில், இந்த  பணிக்குழுவின் தலைவர் மார்க்ஸ் பிளேயர் இதை அறிவித்தார். பிப்ரவரிக்குள் இந்த 6 நிபந்தனைகளை பாகிஸ்தான் நிறைவேற்றவில்லை என்றால், கருப்பு பட்டியலில் அது சேர்க்கப்படும்.

Related Stories: