மாதிரி தொழில்நெறி வழிகாட்டு மையம்: கலெக்டர் திறந்து வைத்தார்

திருவள்ளூர்: திருவள்ளுர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய அலுவலகத்தில், மாதிரி தொழில்நெறி வழிகாட்டு  மையத்தினை கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது, “தமிழ்நாடு  அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலம் தனியார் துறையில் பதிவுதாரர்கள் பணி நியமனம் பெறுவதற்கும், வேலையளிப்பவர்கள்  தங்களுடைய நிறுவனங்களுக்கு தகுதியான ஆட்களை தேர்வு செய்வதற்கும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தினை உருவாக்கி  உள்ளது. வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் www.tnvelaivaippu.gov.in என்ற இணையதளத்தில் புதிய பதிவு, புதுப்பித்தல், கூடுதல்  பதிவு, முகவரி மாற்றம் ஆகியவற்றையும், பதிவுதாரர்கள் www.tncarrerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் போட்டித் தேர்வுகளுக்கான  பாடக்குறிப்புகள், மாதிரி வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம்.

திருவள்ளுர் மாவட்ட மாதிரி தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான உயர் கல்வி  பயில்வதற்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்படுவதுடன், போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்கள் இம்மையத்தில் உள்ள கணினி மூலம்  தங்களுக்கு தேவையான பாடக்குறிப்புகளை பதிவிறக்கம் செய்து கொண்டும் இணையதளம் வாயிலாக தேர்வுகளுக்கு விண்ணப்பித்தும்  பயன்பெறலாம்”என்றார்.இதில் வேலைவாய்ப்பு துறை இணை இயக்குநர் (பொ)  ஆ.அனிதா, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி  வழிகாட்டும் மையம் உதவி இயக்குநர்  க.விஜயா ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

Related Stories: