மசினகுடி அருகே சுற்றித்திரிந்த ரிவால்டோ காட்டு யானை மரக்கூண்டில் அடைப்பு: மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது

ஊட்டி: மசினகுடி  அருகே சுற்றி திரிந்த ரிவால்டோ காட்டு யானை மருத்துவ சிகிச்சை  அளிப்பதற்காக நேற்று வாழைத்தோட்டம் அமைக்கப்பட்டுள்ள மரக்கூண்டில்  (கரோல்) அடைக்கப்பட்டது. முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வாழைத்தோட்டம்,  மசினகுடி, சீகூர் பாலம் உள்ளிட்ட பகுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில்  தும்பிக்கையில் குறைபாடுடன் உலா வரும் ரிவால்டோ என்று அழைக்கப்படும்  காட்டு யானையை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு கொண்டு சென்று முகாம்  யானையாக மாற்றி பராமரிக்க வனத்துறை நடவடிக்கை எடுத்தது. தும்பிக்கையில்  உள்ள துளை மிகவும் சிறியதாக உள்ளது. மயக்க ஊசி செலுத்தி யானையை பிடிக்கும்  பட்சத்தில், மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு வேறு பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் திட்டம்  மேற்கொள்ளப்படவில்லை. மாறாக இந்த யானையை தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு  கால்நடையாக அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி கடந்த பிப்ரவரி துவக்கத்தில் பழங்கள்  வழங்கி கால்நடையாக அழைத்து செல்லப்பட்டது. ஆனால் இந்த முயற்சி  தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் மீண்டும் ரிவால்டோவை தெப்பக்காடு  முகாமிற்கு அழைத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை வனத்துறையினர் எடுத்து  வந்தனர். இதனிடையே பொதுமக்களுக்கு எந்தவித தொந்தரவும் செய்யாமல் உலா  வரும் ரிவால்டோ யானையை, முகாமிற்கு கொண்டு செல்வதற்கு தடை விதிக்க  வேண்டும். வனப்பகுதியிலேயே தொடர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் என்றும், அதனை  வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிக்க உத்தரவிடக் கோரியும் சுற்றுச்சூழல் ஆர்வலர்  ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை  விசாரித்த நீதிபதிகள் ரிவால்டோ யானையை பிடித்து சென்று முகாமில் வைத்து  வளர்ப்பு யானையாக பராமரிக்க அனுமதி மறுத்த நீதிபதிகள், மருத்துவ  சிகிச்சைக்காக பிடிக்கும் பட்சத்தில் தும்பிக்கையில் ஏற்பட்டுள்ள குறைபாடு  மற்றும் பார்வை குறைபாடு ஆகியவற்றிற்கு சிகிச்சை அளித்து குணமடைந்த பின்  மீண்டும் வனப் பகுதியிலேயே விடுவிக்க வேண்டும் என வனத்துறைக்கு  உத்தரவிட்டனர். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி யானைக்கு சிகிச்சை  அளிப்பதற்காக வாழைத்தோட்டம் பகுதியில் கரோல் எனப்படும் மரக்கூண்டு புதிதாக  அமைக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக கரோலுக்குள் தர்பூசணி, வாழைப்பழம்  போன்ற பழவகைகள் வைக்கப்பட்டு யானை எந்த தொந்தரவுமின்றி உள்ளே சென்று வர  அனுமதிக்கப்பட்டது. நேற்று காலை கரோலுக்குள் வைக்கப்பட்ட பழங்களை எடுக்க  ரிவால்டோ உள்ளே சென்ற உடன் கரோல் மூடப்பட்டது. ஓரிரு நாட்களில் அதற்கு  சிகிச்சை அளிப்பதற்கான பணிகள் துவங்க உள்ளது. சிகிச்சைக்குப்பின் அது  தொடர்பான அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். பின்னர் கால்நடை  மருத்துவர்களின் கருத்துகள் கேட்கப்பட்டு மீண்டும் வனத்தில் விடுவிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்….

The post மசினகுடி அருகே சுற்றித்திரிந்த ரிவால்டோ காட்டு யானை மரக்கூண்டில் அடைப்பு: மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது appeared first on Dinakaran.

Related Stories: