ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்க நிதி மோசடி வழக்கு பரூக் அப்துல்லாவிடம் அமலாக்கத்துறை விசாரணை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்க நிதி முறைகேடு தொடர்பாக, முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சி தலைவருமான பரூக் அப்துல்லாவிடம் அமலாக்கத்துறை நேற்று திடீர் விசாரணை நடத்தியது. கடந்த 2002 மற்றும் 2005-2012 வரையிலான காலகட்டத்தில் ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தில் நிதி முறைகேடு நடந்ததாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறது. அந்த காலகட்டத்தில் ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்த அப்போதைய முதல்வர் பரூக் அப்துல்லா மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்க அமலாக்கத்துறை பரூக் அப்துல்லாவுக்கு சமீபத்தில் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்நிலையில், நேற்று அவர் அமலாக்கத்துறையிடம் நேரில் ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

சமீபத்தில், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை சீனாவுடன் இணைந்து மீட்போம் என்று பேசிய பரூக் அப்துல்லா, காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதற்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உமர் அப்துல்லா மற்றும் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தியுடன் ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து, பரூக் அப்துல்லாவின் மகனும் தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத்தலைவருமான உமர் அப்துல்லா தனது டிவிட்டரில், ‘இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. ஜம்மு காஷ்மீரில் மீண்டும் சிறப்பு அந்தஸ்து கொண்டு வர வேண்டுமென மக்கள் கூட்டணி சமீபத்தில் தொடங்கப்பட்டது. அதன் எதிரொலியாகவே இந்த விசாரணை நடைபெற்றுள்ளது’ என்று கூறியுள்ளார். இந்த விவகாரம் கடும் சர்ச்சையைாகி உள்ளது.

Related Stories: