அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அதிமுகவினரால் ரூ200 கோடி இயற்கை வளங்களை கொள்ளையடிக்க முயற்சி நடக்கிறது: காங். எம்பி ஜோதிமணி குற்றச்சாட்டு

குஜிலியம்பாறை: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட அதிமுகவினரால் வேடசந்தூர் தொகுதியில் ₹200 கோடி மதிப்பிலான இயற்கை வளங்களை கொள்ளையடிக்க முயற்சி நடப்பதாக கரூர் தொகுதி காங்கிரஸ் எம்பி ஜோதிமணி குற்றம் சாட்டியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை தாலுகா ஆர்.கோம்பை சீலக்கரட்டில் சிட்கோ அமையவிருக்கும் இடத்தை நேற்று காங்கிரஸ் எம்பி ஜோதிமணி பார்வையிட்டு கிராம மக்களை சந்தித்து பேசினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: நானோ, இங்கு போராடுகிற மக்களோ சிப்காட் அல்லது சிட்கோவை இங்கு, கொண்டு வந்து வேலை வாய்ப்பை உருவாக்குவதற்காக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

ஆனால் வேடசந்தூர் தொகுதியில், சமநிலப்பரப்பு உள்ள தரிசு நிலங்களை கண்டறியாமல், அதனை ஆய்வுக்கும் உட்படுத்தாமல் எங்கெல்லாம் மலை மற்றும் இயற்கை வளங்கள் உள்ளதோ அதனை கண்டறிந்து, 200 கோடி ரூபாய் மதிப்புள்ள மண் வளத்தை கொள்ளையடிப்பதில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட ஆளுங்கட்சி தரப்பினர் முழுமையாக ஈடுபட்டுள்ளனர். வனத்துறை அமைச்சர் இருக்கும் மாவட்டத்தில் இந்த செயல் நடக்கிறது.  இதை கருத்தில் கொண்டே சிட்கோ அமைய உள்ள இடத்தை பார்வையிட சென்ற என்னை அங்கு கட்சி நிர்வாகிகளுடன் இருந்த அதிமுக ஒன்றிய செயலாளர் மலர்வண்ணன், எம்.பி என்று கூட பாராமல் என்னை ஒருமையில் பேசி தகராறில் ஈடுபட்டார். இதுகுறித்து மாவட்ட எஸ்பியிடம் புகார் தெரிவித்துள்ளேன். கலெக்டரிடம் இன்று நேரடியாக புகார் கொடுக்க உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: