விவசாயிகளிடம் ஒரு ரூபாய் பெற்றாலும் கேவலம் தான்: அமைச்சர் காமராஜ் கருத்து

திருத்துறைப்பூண்டி: விவசாயிகளிடம் 1 ரூபாய் பெற்றாலும் அது கேவலமான செயல்தான் என அமைச்சர் காமராஜ் தெரிவித்தார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நேற்று அளித்த பேட்டி: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் 32,41,000 மெட்ரிக் டன் நெல் இதுவரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 6 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். விவசாயிகளின் வங்கி கணக்கில் 24 மணி நேரத்திற்குள் ரூ. 6,130 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது. குறுவைக்கு மட்டும் 826 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. 2,10,000 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

மழையில் நெல் நனையாமல் இருக்க நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு தார்ப்பாய் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளிடம் இருந்து வரும் புகாரில் சிக்கும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் ஆய்வு நடந்து வருகிறது. விவசாயிகளிடம் இருந்து ஒரு ரூபாய் பெற்றாலும் கண்டனத்துக்குரியதாகும். அது மோசமான செயல். அதைவிட கேவலமான செயல் கிடையாது. நெல் எடுப்பதில் வரும் நெருக்கடி குறித்து ஓரிரு நாட்களில் சரி செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: