வெளிநாடுகள், தனியார்களிடம் வேலை செய்த 385 டாக்டர்கள் டிஸ்மிஸ் கேரளாவில் அரசு அதிரடி: 47 சுகாதார ஊழியர்களும் நீக்கம்

திருவனந்தபுரம்: கேரளாவில்  பல ஆண்டுகளாக பணிக்கு வராமல் டிமிக்கி கொடுத்த 385 அரசு டாக்டர்கள்  உட்பட 432 சுகாதார ஊழியர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். கேரள அரசில் பணிக்கு சேர்ந்த டாக்டர்கள், நர்சுகள், சுகாதார ஆய்வாளர்கள் உள்பட ஏராளமானோர் நீண்டகால விடுப்பு எடுத்து  வெளிநாடுகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் பணி புரிந்து வருகின்றனர். இவர்களுக்கு சம்பளம் அதிகம் கிடைப்பதால் தொடர்ந்து அங்கேயே இருந்து விடுகின்றனர். இந்நிலையில், நீண்டகால விடுப்பில் சென்றவர்கள்  குறித்த விபரம் சேகரிக்கப்பட்டது. பின்னர், அவர்களை பணிக்கு ஆஜராக சுகாதாரத் துறை நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், பெரும்பாலானோர் பணிக்கு திரும்பவில்லை. இதையடுத்து, பணிக்கு திரும்பாத 432 சுகாதாரத் துறை ஊழியர்களை அரசு டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டுள்ளது.

இவர்களில் 385 பேர் டாக்டர்கள். மேலும், 5 சுகாதார ஆய்வாளர்கள், 4 மருந்தாளுநர்கள், 20 நர்ஸ்கள், தலா 2 லேப்-டெக்னீஷியன், ரேடியோகிராபர்கள்  உள்பட 47 சுகாதாரத் துறை ஊழியர்களும் இடம் பெற்றுள்ளனர். இது குறித்து கேரள சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா கூறுகையில், ‘‘ஆயிரக்கணக்கான சுகாதாரத்துறை ஊழியர்கள் இரவு பகல் பாராமல் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சமயத்தில் சிலர் எந்த காரணமும் இல்லாமல் பணிக்கு வராமல் இருப்பது முறையல்ல. அவர்கள் பணியில் சேர பலமுறை வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஆனால், பெரும்பாலோர் பணிக்கு திரும்பவில்லை. எனவே, அவர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்,’’ என்றார்.

Related Stories: